விமானத்தாக்குதலால் அழிக்கப்பட்ட காஸா புனரமைப்பும், காணாமல் போன இஸ்ராயேலிய இராணுவத்தினரும்.
புதிய இஸ்ராயேலின் புதிய பிரதமர் நப்தலி பென்னட்டுடன் முதல் முதலாகத் தொலைபேசியில் பேசிய எகிப்திய அதிபர் சிஸி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ராயேலிய விமானத் தாக்குதலால் அழிந்த காஸாவின் பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவது பற்றி உரையாடினார். அப்போரின் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கெடுத்த எகிப்து அழிந்த பகுதிகளை மீண்டும் புனரமைப்புச் செய்வதிலும் மும்முரம் காட்டுகிறது.
புனருத்தாரண வேலைகளுக்காக எகிப்தும், கத்தாரும் தலைக்கு 500 மில்லியன் டொலர்களைக் கொடுப்பதாக உறுதி கூறியிருக்கின்றன. வேகமாகக் காஸாவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான உதவிகளைச் செய்வதன் மூலம் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ராயேலுக்கும் இடையேயான நீண்டகால அமைதிக்கு உதவலாம் என்று எகிப்தின் ஜனாதிபதி சுட்டிக் காட்டுகிறார்.
இரண்டு மில்லியன் பேர் வாழும் காஸாவின் மூன்றிலிரண்டு பங்கினர் மனிதாபிமான உதவிகளிலேயே தங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த போரில் தாக்கப்பட்டு 2,200 வீடுகள் அழிந்திருப்பதாகவும், 37,000 பேர் அகதிகளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புனருத்தாரண வேலைகளை ஆரம்பிக்க முன்னர் 2014 இல் ஹமாஸ் இயக்கத்தினருடன் நடந்த போரில் காணாமல் போன இரண்டு இஸ்ராயேல் இராணுவ வீரர்கள், இரண்டு இஸ்ராயேல் குடிமக்களைப் பற்றிய விபரங்களைத் தரவேண்டுமென்கிறது இஸ்ராயேலிய அரசு. தற்போதைய நிலைமையில் காஸாவுக்கு அதி அத்தியாவசியமான பொருட்கள் தவிர வேறெவையும் வர இஸ்ராயேல் அனுமதிக்க மறுத்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்