இஸ்ராயேல் சிறையிலிருந்து தப்பிய ஆறு பேரில் நால்வர் இருவரிருவராகப் பிடிபட்டார்கள்.

இஸ்ராயேலுக்குப் பெரும் அவமானமாக நாட்டின் கடும்காவல் சிறையிலிருந்து அகழி தோண்டித் தப்பியோடிய பாலஸ்தீனக் கைதிகள் ஆறு பேரில் நால்வர் சனியன்று பிடிபட்டிருக்கிறார்கள் என்று இஸ்ராயேல் அறிவித்திருக்கிறது. அந்த ஆறு பேரின் சிறையுடைப்பு நாட்டின் சிறைக்கைதிகளிடையே சமீப நாட்களில் பல எழுச்சிகளுக்கும் அதனாலேற்பட்ட கைகலப்புக்களுக்கும் காரணமாகியது.

கைது செய்யப்பட்டவர்களைப் பிடித்தே ஆவது என்று முழுப் பலத்துடன் இஸ்ராயேலின் பாதுகாப்பு அமைப்புக்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. தப்பியோடியவர்கள் எல்லோருமே பெரும் ஆபத்தானவர்கள் என்று அறிவித்திருந்தாலும் முக்கியமாக ஸக்கரியா ஸுபெய்தி என்ற ஆயுதப்படைத் தலைவனின் தப்பியோடல் இஸ்ராயேல் அரசுக்கு முகத்தில் கரிபூசியது போலிருந்தது. அவனும் இன்னொருவனுடன் சனியன்று அதிகாலை அரபுக் கிராமமொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

வெள்ளியன்று நடுநிசியில், தப்பியோடியவர்களில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் நாஸரேத்தையடுத்திருந்த பகுதிகளின் வீட்டுக் குப்பைகளில் உணவு தேடிக்கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள் பொலீசாருக்கு அறிவித்தார்கள். ஸக்கரியா ஸுபெய்தியையும் அவனுடன் இன்னொருவனையும் கைது செய்வதற்கும் பொதுமக்கள் கொடுத்த செய்திகளே உதவியதாக இஸ்ராயேல் பொலீஸ் தெரிவித்திருக்கிறது.

தப்பியோடியவர்களில் மேலும் இருவரைத் தேடித் தாம் தொடர்ந்தும் நாள் முழுவதும், முழுப் பலத்துடன் இயங்கி வருவதாக இஸ்ராயேல் அரசு தெரிவிக்கிறது.

கில்போவா சிறையிலிருந்து குறிப்பிட்ட பாலஸ்தீனக் கைதிகள் தப்பியதிலிருந்தே இஸ்ராயேலின் மேற்குப் பள்ளத்தாக்கு, காஸா பகுதிகளில் வாழ்பவர்கள் தப்பியோடியவர்களுக்காக ஆதரவு கொடுக்கும் பேரணிகளை நடாத்தி வந்தார்கள். அவர்கள் பல தடவைகள் இஸ்ராயேல் பொலீஸாரையும் எல்லைப் பாதுகாப்பையும் தாக்கி வந்தார்கள். இஸ்ராயேல் மீது ஏவுகணையும் அனுப்பப்பட்டது. பதிலுக்கு, இஸ்ராயேலின் விமானப்படை காஸாவில் குறிவைத்துத் தாக்கியது.

“நெருக்கமான, கடுங்காவல் சிறையிலிருந்து அந்த ஆறு பேரால் தப்பியோட முடியுமானால் பாலஸ்தீனர்களால் தமது சுதந்திரத்தையும் வென்றெடுக்க முடியும்,” என்று குறிப்பிட்டு காஸா பிராந்திய இயக்கத்தினர் தமது போராட்டங்களை முடுக்கிவிடத் தயார் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *