தனது நாட்டு மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் நான்கு மணி நேரம் பதிலளித்த புத்தின்.
இன்று ரஷ்ய மக்களுடன் நேரலையில் சந்தித்த ஜனாதிபதி புத்தின் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஏற்கனவே இதுபற்றி அறிவிக்கப்பட்ட பின்பு நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தொலைபேசியில் தமது ஜனாதிபதியை நேரடியாகக் கேள்விகள் கேட்க ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
நான்கு மணி நேரம் நடந்த அந்த நேர்காணல் நிகழ்ச்சியின் முக்கிய கேள்விகள் நாட்டின் கொரோனாத் தொற்றுக்கள் பற்றியும், கட்டாயமாகத் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளவேண்டுமா என்பது பற்றியுமாக இருந்தன. ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தைத் தான் போட்டுக்கொண்டிருப்பதாக முதல் தடவையாகப் பொதுவெளியில் தெரிவித்த விளாமிடிர் புத்தின் அவர்கள் தான் “கட்டாயமாகத் தடுப்பு மருந்து” என்ற எண்ணத்தைக் கொண்டவரல்ல என்பதையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
வேகமாகக் கொவிட் 19 தொற்றிக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் ரஷ்யாவில் அவ்வியாதியால் இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இன்றைய நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 660 என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை ஒரே நாளில் இறந்தவர்களில் மிக அதிகமான தொகை இன்றாகும்.
ரஷ்யாவில் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள பலர் விரும்பவில்லை. அவர்களிடம் தன் ஆதரவை இழந்துவிடாமலிருக்கவே புத்தின் கட்டாயமாக எல்லோரும் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. நாட்டின் பதினொரு விகிதமானவர்கள் மட்டும் இதுவரை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆயினும் கூட “தடுப்பு மருந்து முகாம்கள் வெற்றிகரமாக நடக்கின்றன” என்றார் ஜனாதிபதி.
“நீங்கள் இன்னும் எத்தனை வருடங்கள் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கத் தயார்?” என்ற கேள்வியொன்றும் புத்தினை நோக்கி எழுப்பப்பட்டது.
பதிலாக, “ஒரு காலம் வரும், அப்போது இந்த அருமையான நாட்டை ஆளத் தகுதியுள்ள ஒருவர் வருவார். அவரிடம் நான் ஆட்சியை ஒப்படைப்பேன்,” என்றார்.
சாள்ஸ் ஜெ. போமன்