சீனாவில் மலேரியா அழிக்கப்பட்டுவிட்டதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு அறிவித்திருக்கிறது.
“மலேரியாவின் தாக்குதலிலிருந்து விடுபட்ட சீன மக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுச் சீனாவில் மலேரியா நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதற்கு உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அட்னம் கெப்ரியேசுஸ் வாழ்த்தினார்.
அடுத்தடுத்து மூன்று வருடங்கள் நாட்டில் மலேரியா நோயாளிகள் எவருமில்லையென்று நிரூபிப்பதுடன், தொடர்ந்தும் மலேரியாவுக்கு எதிரான பலமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் காட்டும் நாடுகளே அதிலிருந்து விடுபட்டுவிட்டதாக “உத்தியோகபூர்வமாக” பிரகடனப்படுத்தப்படுகின்றன. சீனா 1940 களில் வருடாவருடம் 30 மில்லியன் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு வந்தார்கள். அதற்கெதிரான போராட்டத்தின் வெற்றியால் கடந்த நான்கு வருடங்களாக அங்கே மலேரியா நோயாளிகள் எவரும் பதியப்படவில்லை.
“சீனாவின் மலேரியாவுக்கு எதிரான போராட்டம் கடுமையான உழைப்பினால் பெறப்பட்டது. தொடர்ந்து விடாமுயற்சியுடன் அந்த நோய்க்கெதிராகப் போராடி அழித்ததன் மூலம் மலேரியாவை ஒழித்த உலக நாடுகளின் பட்டியலில் சேர்ந்துகொள்கிறது,” என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் அறிவிப்பு குறிப்பிடுகிறது.
பராகுவாய், உஸ்பெக்கிஸ்தான், ஆர்ஜென்ரீனா, அல்ஜீரியா மற்றும் எல் சல்வடோர் ஆகிய நாடுகள் 2018 – 2021 இல் மலேரியாவிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டவையாகும். உலகில் அவ்வியாதியற்ற நாடுகளாக 40 நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. அவை தவிர மேலும் 61 நாடுகளில் மலேரியா இருந்ததாக அறியப்படவில்லை, அல்லது அழிக்கப்பட்டுவிட்டது.
நாட்டின் கொம்யூனிஸ்ட் கட்சியின் நூறு வருட விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் சீனாவுக்கு உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் அந்த அறிவிப்பு முக்கியமானதாகும். 1950 முதல் அந்த அமைப்பின் உதவியுடன் சீனா மலேரியா நுழம்பு பெருகக்கூடிய பிரதேசங்களில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அப்போராட்டத்தின் விளைவாகச் சீனாவால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஆர்ட்டெமிஸினின் [Artemisinin] ஆகும். உலகளவில் மலேரியாவுக்கு எதிராகப் பாவிக்கப்படும் மிகவும் பலமான மருந்து அதுவே. 1980 களில் மலேரியா நுழம்புக்கெதிரான மருந்து தடவிய நுளம்பு வலைகளைச் சீனா பாவிக்க ஆரம்பித்தது. அதன் வெற்றியும் குறிப்பிடத்தக்கதாகும். 1990 அளவில் உலகளாவிய ரீதியில் 2.4 மில்லியன் நுளம்பு வலைகள் பாவிக்கப்பட்டன.
அச்சமயத்தில் 117,000 என்ற எண்ணிக்கைக்கு சீனாவின் மலேரியா நோயாளிகள் குறைந்தனர். அத்துடன் தொற்றியவர்களில் 95 விகிதத்தினர் காப்பாற்றவும் பட்டனர்.
“சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி எப்போதுமே நாட்டு மக்களை மட்டுமன்றி உலக மக்களையும் காப்பாற்றும், நல்ல சேவை வழங்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. மலேரியாவுக்கெதிரான சீனாவின் நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கு முக்கியமான வரப்பிரசாதமாகும்,” என்கிறது சீனாவின் அரசு தனது அறிக்கையில்.
சாள்ஸ் ஜெ. போமன்