ஆஸ்திரேலியாவின் தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு, அஸ்ரா செனகா பற்றிய சர்ச்சைகள்!

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றல்லாது ஆஸ்ரேலியாவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. தேவையான அளவு மருந்து கையிருப்பிலில்லை, தடுப்பு மருந்துகள் போடுதலில் வேகம் குறைவு மற்றும் நம்பிக்கையில்லாமல் தடுப்பு மருந்துகளைப் போட மறுப்பவர்கள் தொகை போன்றவை அவைகளில் சிலவாகும். இந்த நிலையில் மீண்டும் கொரோனாத் தொற்றுக்கள் தலைதூக்கி நாட்டின் பெரும்பாகத்தை முடக்கவேண்டிய நிலைமை வந்திருப்பதால் ஆஸ்ரேலிய அரசு பல முனைகளிலும் நெருக்கடியைச் சந்திக்கிறது.

https://vetrinadai.com/news/australia-again-covid-restri/

ஐந்தே விகிதமான ஆஸ்ரேலியர்கள் தான் இதுவரை இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றிருக்கிறார்கள். சுமார் 29 விகிதத்தினர் ஒரு தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள். அதன் முக்கிய காரணம் தட்டுப்பாடும், ஆஸ்ரேலியர்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்து பற்றி ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களே என்று குறிப்பிடப்படுகிறது.

மெல்போர்னில் தயாரிக்கப்படும் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளே அங்கே பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றன. தேசிய அளவில் கொடுக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகள் பற்றிய ஆலோசனைகளும், மாநில அளவில் கொடுக்கப்படுபவைகளும் வெவ்வேறாக இருக்கின்றன. தடுப்பு மருந்துகள் பற்றிய ஆலோசனைகளை அரசுக்குக் கொடுக்கும் அமைப்பு [Australian Technical Advisory Group on Immunization] அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து 60 வயதுக்கு அதிகமானோருக்கு மட்டுமே கொடுக்கும்படி பிரேரித்திருக்க, தேசிய அளவில் எல்லோருக்கும் அந்தத் தடுப்பு மருந்து கொடுக்கப்படுமென்று ஆஸ்ரேலிய அரசு அறிவித்திருப்பதும் மக்களை தடுமாற வைத்திருக்கிறது.

மேற்கு ஆஸ்ரேலியா, குவீன்ஸ்லாந்தின் மாநில அரசுகள் அரசின் அறிவிப்பை விரும்பாததால் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கின்றன. 

“அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்தை எடுத்த ஒரு பதினெட்டு வயதுக்காரர் இரத்தக் கட்டிகள் ஏற்பட்டு மரணமடையக் கூடிய நிலைமையை நான் ஏற்றுக்கொள்ள இயலாது. அதுவும் அந்த நபர் பெரும்பாலும் கொவிட் 19 ஆல் மரணமடையக்கூடிய சாத்தியக்கூறுகள் அதைவிடக் குறைவானது என்ற நிலைமை இருக்கும்போது,” என்கிறர் குவீன்ஸ்லாந்தின் மக்கள் ஆரோக்கிய நிர்வாகி ஜனட் யங்.

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளைத் தவிர பைசர் பயோன்டெக் தடுப்பு மருந்து மட்டுமே ஆஸ்ரேலியாவில் பாவிக்கப்படுகின்றது. ஆனால், அது வேண்டிய அளவுக்குக் கிடைக்கவில்லை.

நாட்டில் டெல்டா திரிபு பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நிலைமையை எதிர்கொள்ள ஒரேயொரு வழி வேகமாக நாட்டு மக்களுக்குத் தடுப்பு மருந்துகொடுப்பது மட்டுமே என்கிறது ஆஸ்ரேலியா. தனிமைப்படுத்தல் முகாம்கள், வயதானவர்களுடன் சேவை செய்பவர்கள் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்கிறது ஆஸ்ரேலியா.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *