“தடுப்பூசி போட்டுக்கொள்ள எங்களிடம் வாருங்கள்,” என்று வெளி நாட்டவரையும் வரவேற்கும் செர்பியா.

பக்கத்து நாட்டு மக்களையும் வரவேற்றுத் தடுப்பூசி கொடுக்கும் முதலாவது ஐரோப்பிய நாடாகியிருக்கிறது செர்பியா. கடந்த வார இறுதியில் செர்பியா அந்த அழைப்பைத் தனது பக்கத்து நாட்டவர்களுக்கு விடுத்திருந்தது. அதையேற்று சுமார் 22,000 பேர் செர்பியாவின் தலைநகரான பெல்கிரேட்டுக்கு வந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக செர்பியா தெரிவிக்கிறது. 

யூகோஸ்லாவியக் குடியரசு என்ற பெயரிலிருந்த நாட்டிலிருந்து பிரிந்த ஒரு பாகமான செர்பியாவைச் சுற்றி வட மக்கடோனியா, கிரவேஷியா, பொஸ்னியா, ஸ்லோவேனியா, மொன்ரிநீக்ரோ, கொஸோவோ, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. 

இது ஒரு மனிதாபிமானச் செயல் போலத் தோன்றினாலும் இதன் பின்னாலிருக்கும் ஒரு விடயம் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகள் ஆகும். விரைவில் பாவிப்பு இறுதித் திகதி முடியவிருக்கும் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளைப் பாவித்து முடிக்கவேண்டும் என்ற கட்டாயமும் அந்தத் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளும் விருப்பம் செர்பியர்களிடையே குறைந்து வருவதும் பின்னாலிருக்கும் காரணங்களில் முக்கியமாகும். 

மற்றைய நாடுகள் போலன்றி செர்பியாவின் குடிமக்கள் தாம் எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை எடுக்க விரும்புகிறோம் என்பதைத் தெரிவுசெய்து பதிந்துகொள்ளலாம். ஐக்கிய ராச்சியம், மால்டா ஆகிய நாடுகளை அடுத்து மூன்றாவது அதிகமான அளவில் தனது நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகளைக் கொடுத்துவிட்ட நாடு செர்பியாவாகும். நூறு பேருக்கு 34 பேர் தடுப்பூசியை ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள். 

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகள் தவிர, செர்பியா சினோபார்ம், ஸ்புட்நிக் V,  Pfizer-BioNTech ஆகிய தடுப்பு மருந்துகளையும் பாவிக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *