மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்குள் நுழைந்து நதிக்கரையொன்றில் மாட்டிக்கொண்ட யானைகள் இரண்டு காப்பாற்றப்பட்டன.
மியான்மாரின் மேற்குப் பகுதியிலும், பங்களாதேஷின் தெற்குப் பிராந்தியங்களிலும் இருக்கும் காடுகளில் ஆசியாவின் அழிந்துவரும் யானை இனங்களில் ஒரு பகுதி வாழ்ந்து வருகின்றன. அவ்விரண்டு பிராந்தியங்களுக்கும் இடையேயிருக்கும் காட்டுப் பகுதிகளில் 2017 இன் பின்னர் பங்களாதேஷ் ரோஹின்யா அகதிகளுக்கான முகாம்களைக் கட்டியிருக்கிறது. அதனால் அந்த யானைகளின் சாதாரணமான நடமாடும் பிராந்தியம் வெட்டப்பட்டுவிட்டது.
அதனால் யானைகள் பாதை தெரியாமல் தவறி மனிதர்கள் வாழும் பகுதிகளில் மாட்டிக்கொள்கின்றன. விளைவாக, யானைகள் மனிதர்களைத் தாக்குதல், கொல்லப்படல் ஆகியவையும் நடக்கின்றன. வழி தவறிய யானைகள் உணவுக்கு வழியின்றி விவசாய நிலங்களின் அறுவடைகளில் சாப்பிடுவதால் மக்கள் கோபம் கொண்டு தாக்குகின்றனர்.
குறிப்பிட்ட ஆண், பெண் யானைகள் தமது கூட்டத்திலிருந்து விலகித் தனியாக நதிக்கரையில் மாட்டிக்கொண்டன. அவைகள் நான்கு நாட்களாக உணவின்றி அப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டு ஒதுங்கி வங்காளக் கடலுக்குள் பாய்ந்து நீந்த ஆரம்பித்தன. அதைக் கண்ட மீன்பிடியாளர்கள் அவைகளாக் காப்பாற்றிக் காட்டிலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதேபோன்று வழி தவறி மாடிக்கொண்டு கடந்த வருடம் அப்பகுதியில் இறந்துபோயிருந்த யானைகளின் எண்ணிக்கை ஏழு என்று குறிப்பிடப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மூலமே யானைகளின் கூட்டம் அழியாமல் காப்பாற்றலாமென்கிறார்கள் பங்களாதேஷ் வனவிலங்கு அதிகாரிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்