கொவிட் 19 ஆல் மரணமடைந்தவர்களின் பெயர், விபரங்களைப் பகிரங்கமாக மீண்டும் வெளியிடுகிறது கேரளா.
கேரளாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் வீணா ஜோர்ஜ், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடியாக, கேரள அரசு மீண்டும் கொவிட் 19 ஆல் இறந்துபோனவர்களின் பெயர்களை வெளியிட முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்குப் பின்பு சனியன்று மீண்டும் முதல் கேரள அரசு 135 கொவிட் 19 இறப்புகளுக்கு உள்ளானவர்களின் பெயர் விபரங்களை அறிவித்தார்.
கடந்த வருடம் டிசம்பர் 22 ம் திகதிவரை அவ்வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் பெயர்களை வெளியிட்டு வந்த கேரள அரசு எவ்வித அறிவிப்பும், விளக்கமுமின்றி அதை நிறுத்தியிருந்தது.
கேரளாவின் எதிர்க்கட்சிகள் மா நிலத்தில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் விபரங்களை அரசு முழுசாக வெளிப்படுத்தாமல் மூடி மறைப்பதாக விமர்சித்து வருவது தவறென்று நிரூபிக்கவே அவை வெளியிடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் இதுவரை வெளியிடப்படாதவர்களின் விபரங்களும் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே பிறப்பு, இறப்பு விபரங்கள் 100 விகிதம் நேர்மையாகப் பதியப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
சாள்ஸ் ஜெ. போமன்