குறைக்கப்பட்ட வேலைநேர முயற்சி ஐஸ்லாந்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
பிரிட்டிஷ் மற்றும் ஐஸ்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஐஸ்லாந்தில் தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளைப் பரிசீலித்து வந்தார்கள். தலை நகரான ரெய்க்காவிக், நாட்டின் அரசாங்கம் ஆகியவையின் உதவியுடன் இந்த ஆராய்ச்சி 2015 – 2019 வரை நடந்தது. அதன் மூலம் 86 விகிதமான ஐஸ்லாந்துத் தொழிலாளர்கள், வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, குறைக்கப்பட்ட வேலை நேரம் அல்லது அப்படியானவைகளிலொன்றை அனுமதிக்கும் தொழில் ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
நகரசபை அலுவலகர்கள், மருத்துவச் சேவையிலிருப்பவர்கள், குழந்தைகள் காப்பகங்களில் வேலைசெய்யும் 2,500 பேருக்கு வேலை நேரம் அதே சம்பளத்துடன் 34 -36 மணியாகக் குறைக்கப்பட்டது. பகுதி நேர வேலை செய்பவர்களுக்கும் அதே வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அந்தத் தொகை ஐஸ்லாந்தின் மொத்தத் தொழிலாளர்களில் ஒரு விகிதமாகும். ஐந்து வருடங்களாக அந்த முயற்சி தொடரப்பட்டது.
இந்த முயற்சியின் விளைவு குறிப்பிட்ட வேலையிடங்களில் அதேயளவு வேலைகள் நிறைவேற்றப்பட்டன, அல்லது அதைவிட அதிகமான வேலை செய்யப்பட்டது. அதாவது சராசரியாக ஒவ்வொரு தொழிலாளியின் வேலையும் குறையாமலிருந்தது அல்லது அதிகரித்திருந்தது.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் “ஸ்திரமான ஜனநாயகம்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நடாத்தப்பட்டது. இவ்வாராய்ச்சியைப் பற்றிய விபரங்களை வெளியிட்ட ஆராய்வாளர்கள்,”இதன் மூலம் பொதுச் சேவையாளர்கள் தமது வேலை செய்யும் நேரத்தைக் குறைத்துக்கொள்வதற்குத் தயாராகிவிட்டார்கள் என்பதே. இதையே மற்றைய நாடுகளும் தமது தொழிலாளர்களிடையே முயற்சி செய்யலாம்,” என்கிறார்.
இந்த முயற்சியில் பங்குபற்றிய தொழிலாளர்கள் தமது வேலை நேரம் குறைந்ததன் மூலம் தமது ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறது, பொழுதுபோக்கு விடயங்களுக்கு மேலும் நேரம் கிடைக்கிறது, மன அழுத்தம் குறைந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள். அத்துடன் ஓய்வுபெறுதலுக்கு முன்னரே தமது ஆரோக்கியத்தில் பலவீனம் ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அது சுகவீன காரணத்தால் குறைந்த வயதிலேயே ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறது.
வரவிருக்கும் இலையுதிர்காலத்தில் இதேபோன்ற முயற்சியொன்று ஸ்பெயினில் தனியார் நிறுவனங்களிடையே ஆரம்பமாகவிருக்கிறது. அங்கே 200 நிறுவனங்களைச் சேர்ந்த 6,000 தொழிலாளர்களுக்குக் குறைந்த நேர வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நியூசிலாந்தில் யுனிலிவர் நிறுவனம் தனது தொழிலாளர்கள் அதே சம்பளத்துடன் 20 விகித நேர வேலையைக் குறைப்பதற்கு அனுமதித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்