இந்தியா, பிரிட்டன் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவதற்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
கொவிட் 19 மோசமாகப் பரவும் நாடுகளின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நாடுகளான இந்தியா, ஐக்கிய ராச்சியம், ரஷ்யா, போர்த்துக்கல், நேபாளம் ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இருந்து மாற்றப்படும் என்று ஜேர்மனி அறிவிக்கிறது. ஜூலை 07 ம் திகதி முதல் அந்த நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குப் பயணம் செய்கிறவர்கள் இரண்டு வாரக் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருக்கத் தேவையில்லை.
மே மாதப்பகுதியில் பிரிட்டனின் பயணவிதிகள் குறுகிய காலம் தளர்த்தப்பட்டபோது அங்கிருந்து போர்த்துக்காலுக்குப் பயணித்தவர்களால் டெல்டா அங்கேயும் பரவ ஆரம்பித்தது. தவிர, ரஷ்யாவிலும் பரவல் சமீப வாரங்களில் அதிகமாக இருந்ததால் அவ்விரு நாடுகளும் ஜூன் 29 ம் திகதி ஜேர்மனியின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன. ஐக்கிய ராச்சியம் மே 23 முதலும் அதற்கு முன்னரிருந்தே இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளும் அப்பட்டியலில் இருந்தன.
பிரேசில், தென்னாபிரிக்கா, உருகுவே, சிம்பாவ்வே, சாம்பியா உட்பட மேலும் சில நாடுகள் தொடர்ந்து ஜேர்மனியின் சிகப்புப் பட்டியலில் இருக்கின்றன. அவ்வப்போது அந்தந்த நாடுகளின் ஏற்பட்டுவரும் கொரோனாத் தொற்று நிலைமையைப் பொறுத்து அவை மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிறது ஜேர்மனி.
சாள்ஸ் ஜெ. போமன்