திங்களன்று கொப்பா அமெரிக்கா கிண்ணத்தின் இறுதிப் பந்தயத்துக்குத் தயாராகிவிட்டது.
பெருவைத் தனது அரையிறுதிப் போட்டியில் சந்தித்த பிரேசிலின் உதைபந்தாட்டக் குழு 1 – 0 மூலம் வென்று மீண்டுமொருமுறை கொப்பா அமெரிக்கா கிண்ணத்துக்கான கடைசிப் போட்டிக்குத் தயாராகிவிட்டது. ஆர்ஜென்ரீனாவுக்கும் கொலம்பியாவுக்கும் செவ்வாயன்று நடக்கவிருக்கும் மோதலில் பிரேசிலைச் சந்திக்கப்போகும் அணி எதுவென்று தீர்மானிக்கப்படும்.
தனது நாட்டில் அந்தக் கிண்ணத்திற்கான மோதல் நடந்த ஒவ்வொரு முறையும் பிரேசில் அதைக் கைப்பற்றியிருக்கிறது. பிரேசில் அணியின் பயிற்சியாளர் டிட்டி என்றழைக்கப்படும் லியனார்டோ பச்சி கொப்பா அமெரிக்கா மோதல்களில் இதுவரை தோல்வியடையவில்லை. அவரது இயக்கத்தில் அந்தக் குழு இதுவரை எட்டு வெற்றிகளைப் பெற்று இரண்டு தடவைகள் சமனாகியிருக்கிறது. இம்முறை அந்த அணி இறுதிக் கோப்பைக்கான மோதலிலும் வெற்றிபெறுமானால் பிரேசிலை அந்தக் கோப்பைக்கு இட்டுச் சென்று அதிக வெற்றிகளைப் பெற்ற மாரியோ ஸகல்லோவின் சாதனையை அவர் தொட்டுவிடுவார். மாரியோ ஸகல்லோவில் தலைமையில் விளையாடிய 12 மோதல்களில் அவ்வணி 10 வெற்றிகளையும் 2 சமனையும் அடைந்திருக்கிறது.
திங்களன்று நடந்த மோதலின் ஆரம்பத்திலிருந்தே பிரேசில் குழுவின் மேன்மையைக் காண முடிந்தது. ஏற்கனவே பெருவுடன் குழுப் போட்டியில் மோதி பிரேசில் 4 – 0 என்ற இலக்கத்தில் வென்றிருந்தது. அதன் பின்பு தங்களை மேலும் சீர்ப்படுத்திக்கொண்ட பெரு திறமையாக விளையாடியே அரையிறுதிப் போட்டிகளுக்குத் தயாராகியிருந்தது.
லூகாஸ் பக்கேட்டா மோதலின் முதல் பாதியின் போது பந்தை வலைக்குள் அடித்து பிரேசிலை வெற்றியடைய வைத்தார். தொடர்ந்தும் பெருவின் பக்கத்திலேயே பந்தை விளையாடிப் பல தடவைகள் பிரேசில் தனது வெற்றி இலக்கத்தை அதிகரிக்க முயற்சித்தது. பெருவின் மீது அதற்கு மேலும் வெற்றியைப் பெறவிடாமல் குறுக்கே நின்றவர் வலை காக்கும் பெட்ரோ கலேஸெ ஆகும். நெய்மார், ரிட்சார்ட்சன், கஸமிரோ ஆகிய வீரர்களால் உதைக்கப்பட்ட பந்துகளைத் திறமையாகத் தடுத்தார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்