ஸ்பெயின்,போர்த்துக்கல் செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் ஆலோசனை.
கோடை விடுமுறையைக் கழிக்கச் செல்வோர் ஸ்பெயின், போர்த்துக்கல்போன்ற நாடுகளைத் தவிர்க்குமாறு பிரான்ஸ் தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
பொதுவாகப் பிரான்ஸ் மக்கள் விரும்பி உல்லாசப் பயணம் செய்கின்ற அந்த இரு நாடுகளிலும் டெல்ரா வைரஸ் வேகமாகப் பரவிவருவதை அடுத்தே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு ஒரு பயணத் தடை அல்ல, விழிப்புணர்வு எச்சரிக்கை மட்டுமே என்று பிரான்ஸின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அரசுச் செயலர்Clément Beaune விளக்கமளித்துள்ளார்.
ஸ்பெயினின் பல பகுதிகளிலும் வைரஸ்வேகமாகப் பரவி வருகிறது. அங்கு கடந்த24 மணி நேரங்களில் 17,384 புதிய தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர். இது ஒரு லட்சம் பேரில் 190 என்ற எண்ணிக்கைஆகும். கற்றலோனியா (Catalonia) பிராந்தியத்தில் அதிகமாக ஒரு லட்சம் பேரில் 380 பேர் என்ற கணக்கில் தொற்று நிலைவரம் உள்ளது. அங்கு உணவகங்கள், அருந்தகங்கள் என்பன 15 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
வேகமாகப் பரவுகின்றதன்மை கொண்ட டெல்ரா வைரஸ் விடுமுறைக் காலப்பகுதியில் இன்னும் தீவிரமாகப் பரவலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டிய நிலையில் இல்லாவிட்டாலும் பலரும் இளவயதினர் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
போர்த்துக்கல் நாட்டில் அதிகரித்துள்ள தொற்றாளர்களில் 90 வீதமானோருக்கு டெல்ரா வைரஸ் காணப்படுகிறது. அங்குதலைநகர் லிஸ்பேர்ன் உட்பட 45 நகர சபைப் பிரிவுகளில் கடந்த முதலாம் திகதிதொடக்கம் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டடெல்ரா வைரஸ் தற்போது உலகெங்கும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பரவிஉள்ளது. ஐரோப்பாவில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள சமயத்தில் டெல்ரா பரவிவருவது பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.