டெல்ரா உருவாக்கியுள்ள நெருக்கடி: திங்களன்று மக்ரோன் முக்கிய உரை.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் எதிர்வரும் திங்களன்று இரவு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்தவுள்ளார். அவரது உரை இரவு எட்டு மணிக்கு இடம்பெறும் என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.

மக்ரோன் தனது உரையில் நாட்டில் டெல்ரா வைரஸ் ஏற்படுத்தியுள்ளபுதிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை விடுக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதிபரது உரைக்கு முன்னராகச் சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டம் திங்களன்று பகல்எலிஸே மாளிகையில் நடைபெறவுள்ளது. அரசாங்கப் பிரதிநிதிகளும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களும் பங்குபற்றுகின்றஅந்தக் கூட்டத்தில் விரைவில் உருவாகக் கூடிய வைரஸ் தொற்றலையை எதிர்கொள்ளும் வழி முறைகள் ஆராயப்படவுள்ளன.

கோடை விடுமுறைக் காலத்தில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ளூர்மட்டத்தில் கட்டுப்பாடுகளை அமுல் செய்வது –

சுகாதாரப் பணியாளர்கள் உட்பட அவசியமான தொழிற்துறையினருக்குத் தடுப்பூசியை விரைந்து கட்டாயமாக்குவது -உணவகங்கள் உட்பட பல பொது இடங்களுக்குச் செல்வதற்கு சுகாதாரப் பாஸ்அல்லது வைரஸ் சோதனைச் சான்றிதழ்போன்றவற்றைக் கட்டாயமாக்குவது –

போன்ற பல விடயங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன.

சுகாதார விடயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகின்ற அறிவியலாளர்சபை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்ற ஓர் எச்சரிக்கையில், நாடெங்கும் சமூக இடைவெளி பேணுதல் மிகப் பரந்த அளவில் கைவிடப்பட்டிருப்பதைச்சுட்டிக்காட்டி உள்ளது.

கட்டுப்பாடுகளை தற்சமயம் இறுக்காமல் விட்டால் டெல்ரா வைரஸ் சம்பந்தப்பட்ட நான்காவது தொற் றலை, சுகாதாரக் கட்டமைப்புகள் மீது அழுத்தம் தரும் வகையில் விரைவில் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது –

என்றும் அறிவியலாளர் சபை மதிப்பிட்டுள்ளது. நாட்டில் கோடை விடுமுறைக் கலகலப்புக் காரணமாக சமூக இடைவெளி பேணுதல்உட்பட சுகாதாரப் பழக்கவழக்கங்களில் பெரும் தளர்வுப் போக்குக் காணப்படுகிறது. பொது மக்களிடையே தடுப்பூசி ஏற்றும் ஆர்வமும் அருகிவருகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *