நோய்களால் பலவீனமுள்ளவர்களுக்கு இன்று முதல் மூன்றாவது தடுப்பூசி கொடுக்கப் போகிறது இஸ்ராயேல்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது இஸ்ராயேலில். அது கடந்த வாரம் 4,100 ஆகியிருக்கிறது. சுமார் 50,000 பரீட்சைகள் நாளாந்தம் நடாத்தப்படுவதில் சுமார் 500 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். எனவே, உலகில் முதல் நாடாகப் பெரும்பான்மையான குடிமக்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுத்திருந்த இஸ்ராயேலின் கொரோனா – பாதுகாப்பில் ஓட்டை விழுந்திருப்பதாக நாட்டின் தொற்று நோய் திணைக்களம் கருதுகிறது.
ஆனாலும், கடுமையாக நோய்வாய்ப்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருப்பது ஒரு ஆறுதலூட்டும் செய்தியாகும். அது ஏப்ரல் மாதமளவில் 260 ஆக இருந்து தற்போது 44 மட்டுமாகக் குறைந்திருக்கிறது.
புதிய ரகக் கொரோனாத் தொற்றுக்களின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகக் கருதும் இஸ்ராயேல் வெவ்வேறு நோய்களால், அங்கவீனங்களால் பலவீனமானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை இன்று முதல் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதன் காரணம் அவர்களுடைய உடல் ரீதியான பாதுகாப்புக்குப் பிரத்தியேக பலப்படுத்தலை நல்குவதாகும் என்கிறார் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் நிட்ஸான் ஹொரோவிட்ஸ்.
இஸ்ராயேலிடம் தற்போதிருக்கும் பைசர் தடுப்பூசிகளின் காலவரையறை ஜூலை 31 உடன் நிறைவு பெறுவதால் அந்த நிறுவனத்திடமிருந்து மேலும் சிறப்பாக்கப்பட்ட மருந்துகளை வாங்கத் தயாராகிறது இஸ்ராயேல். எனவே இதுவரை தடுப்பூசிகளைப் பெறாத 18 வயதானவர்களுக்குக் கோடைகாலம் முடிந்தபின்னரே தடுப்புசிகள் கொடுக்கப்படும்.
பாவனையிலிருக்கும் மொடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளை வயது வந்தவர்களுக்கு மட்டுமே வழங்கிவருகிறது இஸ்ராயேல்.
சாள்ஸ் ஜெ. போமன்