இருபதாயிரம் ரூபாய் செலவில் 30 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார் பாஸ்கரன்.
தமிழ்நாடு விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனது சொந்த முயற்சியில் ஒரு மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார். அது முப்பது கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. ஒரு யுனிட் மின்சாரத்தைப் பாவித்து ஐம்பது கி.மீற்றர் தூரம்வரை அந்த மிதிவண்டி செல்லும் என்கிறார் அவர்.
இயந்திரப் பொறியியலாளரான அவர் கொரோனாப் பரவல் காலத்தில் வேலையை இழந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மீதி நேரத்தில் தனது முயற்சியால் அந்த மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
கொரோனாக்கால விளைவுகளால் மட்டுமன்றி பெட்ரோல் விலை அதிகரிப்பாலும் உந்தப்பட்ட அவர் 2,000 ரூபாய்க்கு ஒரு பாவித்த மிதிவண்டியை வாங்கித் தனது பரீட்சையைத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார். 18,000 ரூபாய்கள் செலவுசெய்து தான் அதை மின்சார வண்டியாக்கும் உபகரணங்களை வாங்கியதாக அவர் குறிப்பிடுகிறார்.
20,000 ரூபாயில் அப்படியொரு வாகனத்தை உருவாக்க முடிவது சாதாரண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதைக் குறிப்பிடும் பாஸ்கரன் அதற்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப் பதிவுசெய்யவிருக்கிறார். தனது சொந்த உழைப்பிலும், ஆராய்ச்சியிலும் ஊனமுற்றவர்களுக்கான ஒரு குறைந்த விலை வாகனத்தைக் கண்டுபிடிப்பது தனது கனவு என்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்