நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத்தொடர்புத் தாக்குதல் உட்பட்ட பல தாக்குதல்களின் பின்னணியில் சீனா.
மார்ச் 10 திகதி நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத் தொடர்பு மூலம் தாக்கப்பட்டு ஊழியர்களின் மின்னஞ்சல்களுக்குள் யாரோ நுழைந்திருந்தார்கள். பாராளுமன்ற ஊழியர்கள் பாவிக்கும் மைக்ரோசொப்ட் எக்ஸ்சேஞ்ச் மென்பொருள் தாக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றிய ஆராய்வுகளில் ஈடுபட்ட நோர்வே அதன் பின்னணியிலிருந்தது சீனாவே என்று உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
மைக்ரோசொப்ட் எக்ஸ்சேஞ்ச் மென்பொருளின் நோர்வேப் பாராளுமன்ற மையம் தவிர சுமார் 250,000 மையங்கள் உலகமெங்கும் தாக்கப்பட்டன. அவைகளுக்கெல்லாம் சூத்திரதாரியாகச் சீன அரசே இருந்தது என்று நோர்வே மட்டுமன்றி அமெரிக்கா, ஆஸ்ரேலியா, ஐக்கிய ராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஒன்று சேர்ந்து சுட்டு விரலைக் காட்டுகின்றன.
உலக நாடுகளெல்லாம் சேர்ந்து சீனாவின் அரசு குற்றவியல் அமைப்புக்களைப் பயன்படுத்தி உலகெங்கும் தொலைத்தொடர்புத் தாக்குதல்களில் ஈடுபடுவதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பிளிங்கன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகத்திலிருந்து “இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்காமலிருக்கச் சகல சக்திகளையும் பாவிக்கத் தயார்,” என்கிறது.
நோர்வே தனது நாட்டின் சீனாவின் தூதுவரை இன்று வெளிநாட்டு அமைச்சரகத்துக்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறது. அந்தச் சந்திப்பில் எந்தவிடமான ஆதாரங்கள் வைக்கப்பட்டன, விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன என்பதை அவர்கள் வெளியிடவில்லை. சீனாவின் நோர்வே தூதுவராலயமோ அரசோ நடந்தவை பற்றி இதுவரை அறிக்கையெதுவும் வெளியிடவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்