பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமென்று இந்திய இறால் கொள்கலன்களைத் தடுத்திருக்கும் சீனா.
இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்களின் பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமா என்ற சந்தேகத்தை எழுப்பி அவைகளைத் தமது துறைமுகத்தில் தடுத்துவைத்திருக்கிறது சீனா. சுமார் 1,200 கோடி ரூபாய் பெறுமதியான அவை இந்தியாவின் சுமார் 50 கடல் விலங்குகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவையாகும்.
ஒவ்வொரு கொள்கலன்களிலும் சுமார் 16 தொன்களைக் கொண்ட இறால்களுடன் 1,000 க்கும் அதிகமான கொள்கலங்களைச் சீனா தனது துறைமுகங்களில் தடுத்திருக்கிறது. கொள்கலன்களில் இருக்கும் இறால்கள் உறையவைக்கப்பட்ட நிலையில் இருப்பினும் கூட ஒவ்வொரு நாள் கழியும்போதும் அதன் பெறுமதியும் குறைந்துவருகின்றது. அவைகளைத் திருப்பியெடுப்பது பற்றியும் எவ்வித விபரங்களையும் கொடுக்காததால் அந்த 50 நிறுவனங்களும் தமது முதலீடு என்னாகுமென்று அறியாத நிலைமையில் இருக்கின்றன.
குறிப்பிட்ட 50 நிறுவனங்களையும் சீனா ஏற்கனவே தமது நாட்டுக்கு கடல்விலங்குகளை ஏற்றுமதி செய்யலாகாது என்று தடுத்துக் கறுப்புப் பட்டியலில் போட்டிருக்கிறது. அவைகளில் 25 நிறுவனங்கள் ஆந்திராவைச் சேர்ந்தவையாகும். இந்தியாவின் சுமார் 46 விகிதமான இறால் ஏற்றுமதியை ஆந்திராவே செய்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்