ஆப்கானிஸ்தானைச் சர்வதேச நீரோட்டத்துக்குள் கொண்டுவரத் திட்டமிடும் புதிய சக்தியாக உருவெடுக்கிறதா சீனா?
இரண்டு நூற்றாண்டுகளாக தனது நாட்டுக்குள் நடக்கும் அரசியல் கொந்தளிப்புக்களால் வெவ்வேறு நாடுகளின் தலையீடுகளுக்கு உள்ளாகிய ஆப்கானிஸ்தானுக்குள் ராஜதந்திரம் நடத்த நுழைகிறது சீனா. ஆப்கானிஸ்தான் அரசை ஸ்தம்பிக்கச் செய்து நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றியிருக்கும் தலிபான் இயக்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தைகள் நடாத்தியிருக்கிறது சீனா.
உலக நாடுகள் எல்லாவற்றாலும் கைவிடப்பட்ட பின் சீனா தமக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்துக்கு நன்றியாக“இஸ்லாமிய எமிரேத் ஆப்கானிஸ்தான், சீனாவுக்குள் ஆக்கிரமிப்புக்கள் எதையும் நடாத்த தனது நிலப்பிரதேசத்தைப் பயன்படுத்தாது என்று நாம் உறுதியளிக்கிறோம்,” என்று சீனாவுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள் தலிபான் அமைப்பினர். பதிலாக ஆப்கானிஸ்தானின் அரசியலுக்குள் மூக்கை நுழைக்கப் போவதில்லையென்று சீனா உறுதியளித்திருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானுடன் 46 மைல் நீளமான எல்லையைக் கொண்டிருக்கிறது சீனா. பெரும்பாலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 மீற்றர் உயரமான மலைப்பகுதியைக் கொண்ட எல்லை அது. எல்லையையடுத்த சீனப்பக்கத்தில் இருக்கிறது ஷிஞ்ஜியாங் பிராந்தியம். சீனாவின் முஸ்லீம்களான உகுர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள். அந்த எல்லையில் இருக்கும் ஒரேயொரு எல்லை நிலையமான “வகஷீர் மையம்” மூலமாக மட்டுமே அவ்விரு நாடுகளிடையே நிலத்தொடர்புகள் சாத்தியம்.
உகுர் இனத்தவர் தமது இஸ்லாமிய கோட்பாடுகளை ஒழுகவிடாமல் சீனா ஒடுக்கிவருவதாகச் சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரைச் சீன அரசு தனது “ஒழுங்கு முகாம்களில்” அடைத்து வைத்திருப்பதாகவும் பல விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு ஆப்கானிய தலிபான்கள் தமது ஆதரவைக் கொடுப்பதைத் தடுப்பதற்காகவே சீனா தலிபான்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உறவு கொண்டாடுவதாகக் கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தானிஸ்தானுக்குள் தனது காலை ஊன்றுவதன் மூலம் சீனா சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கும் “நவீன பட்டு வீதி” திட்டத்துக்கு ஆதரவு கிடைக்கும். தலிபான்களைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் சபையில் அறுதி வாக்குரிமை கொண்ட சீனாவின் உதவியுடன் சர்வதேச அரசியலில் தமது காய்களை நகர்த்தவும் முடியும்.
சாள்ஸ் ஜெ. போமன்