பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.
“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உம்ரா பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் எதுவும் விலக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.
எப்போதுமே வெளிநாட்டவர்களுக்கான உள் நுழைதலைக் கடுமையாகக் கையாளும் சவூதி அரேபியா தனது பொருளாதார அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டுவரத் தீர்மானித்து இயங்கி வருகிறது. அவைகளில் முக்கியமான ஒரு துறை சுற்றுலாவாகும். சமீப வருடங்களில் நாட்டின் கடுமையான சட்டங்கள் தளர்த்தப்பட்டதுடன், சுற்றுலாத் துறைக்கான விடயங்களில் பெரும் முதலீடுகளைச் சவூதிய அரசு செலவிட்டிருக்கிறது.
பண்டைக்காலக் குடியேற்றங்கள், வித்தியாசமான புவியியல் அமைப்பு, காலநிலை, பலைவனப் பொழுதுபோக்குகள் ஆகியவை கொண்ட சவூதி அரேபியா வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட காலக் கனவாகும். 2019 இன் கடைசி மூன்று மாதங்கள் முதல் 2020 இன் முதல் மூன்று மாதங்கள் வரை சவூதி அரேபியா 40,000 சுற்றுலா விசாக்களைக் கொடுத்திருந்தது. ஆனால், கொரோனாத்தொற்றுக்களின் விளைவால் மீண்டும் நாட்டின் கதவுகள் சகலருக்கும் மூடப்பட்டன.
நாட்டின் 35 மில்லியன் குடிமக்களிடையே 26 மில்லியன் தடுப்பு மருந்துகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அரச அலுவலகங்கல், கல்விக்கூடங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்களில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலாவுக்காக வருபவர்களுக்காக பைசர் பயோண்டெக், அஸ்ரா செனகா, ஜோன்சன் மற்றும் மொடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளே சவூதி அரேபியாவினால் அங்கீகரிக்கப்படிருக்கின்றன. அவர்கள் தமது சவூதிப் பயணத்துக்கு 72 மணித்தியாலத்துக்கு முன்னர் தாம் தொற்றுக்கு உட்பட்டிருக்கவில்லை என்ற சான்றிதழுடன் தமது விபரங்களை நாட்டின் அதிகாரத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்