ஓமான் கடற்பிரதேசத்தில் தமது எண்ணெய்க் கப்பலைத் தாக்கியது ஈரான் என்று குற்றஞ்சாட்டுகிறது இஸ்ராயேல்.

வியாழனன்று ஓமான் கடற்பிரதேசத்தில் போய்க்கொண்டிருந்த “மெர்ஸர் ஸ்டிரீட்” என்ற எண்ணெய்க்கப்பல் தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் அக்கப்பல் மாலுமிகளான ஒரு பிரிட்டரும், ஒரு ருமேனியரும் கொல்லப்பட்டார்கள். லண்டனிலிருக்கும் இஸ்ராயேலிய நிறுவனமொன்றால் வாடகைக்கெடுக்கப்பட்டிருக்கும் அக்கப்பலைத் தாக்கியது ஈரானே என்று குற்றஞ்சாட்டுகிறார் இஸ்ராயேலின் வெளிநாட்டு அமைச்சர் யாயிர் லபிட்.

அமெரிக்க இராணுவத்தின் முதற்கட்ட விசாரணையின்படி அக்கப்பலை ஒரு தற்கொலைக் காற்றாடி விமானம் தாக்கியதாகத் தெரியவருகிறது. அப்படியான காற்றாடி விமானங்கள் தாக்குதலில் தாமும் எரிந்துவிடுகின்றன. குறிப்பிட்ட தாக்குதலின்போது கப்பல் வெறுமையாகவே இருந்தது. 

உத்தியோகபூர்வமாக ஈரான் இதுவரை இஸ்ராயேலின் குற்றச்சாட்டுக்கு எப்பதிலும் கொடுக்கவில்லை. ஈரானியத் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் செய்திகளின்படி இஸ்ராயேல் சமீபத்தில் சிரியாவிலிருக்கும் ஈரானிய இராணுவத் தளத்தைத் தாக்கியதற்கான பதிலடியே இது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல் அவ்விரு நாடுகளுக்குமிடையே சில வருடங்களாகவே நடந்துவரும் நிழற்போரின் ஒரு தாக்குதலே இது என்று இராணுவ வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன. அரசியல் ரீதியில் இது அவர்களுக்கிடையேயான பகையை மேலும் வலுப்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *