ஐரோப்பாவினுள் குடிபெயரஅகதிகளுக்குப் புது வழியை திறந்துவிடுகிறது பெலாரஸ்.
தடைகளுக்கு அந்நாடு பதிலடி.
பால்டிக் நாடுகள் ஊடாக ஐரோப்பாவினுள் குடியேறிகள் நுழைவதற்கான புதிய வழியை பெலாரஸ் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. பெலாரஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பல தடைகளுக்குப் பதிலடியாக அந்நாடு அங்குள்ள வெளிநாட்டு குடியேறிகளைத் தனது எல்லை வழியே ஐரோப்பாவினுள் நுழைய விட்டுள்ளது.கடந்த பல வாரங்களாக பெலாரஸின் எல்லை ஊடாக அயல் நாடாகிய லித்து வேனியாவினுள் (Lithuania) பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டவர்கள் நுழைந்ததை அடுத்து லித்துவேனியாஅதன் எல்லையில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.
ஜூன் மாதம் தொடக்கம் இதுவரை லித்துவேனியா எல்லைக்குள் நுழைந்த வெளிநாட்டவர்கள் சுமார் மூவாயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னர் பெலாரஸ் ஆட்சியை எதிர்க்கின்றவர்கள் மட்டுமே லித்துவேனியாவினுள் எல்லை தாண்டி நுழைவது வழக்கம். தற்போது ஏனைய நாட்டவர்ககளும் அந்த வழியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நாட்டுக்குள் வருகின்ற சட்டவிரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசர சட்டங்களை லித்துவேனியா நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. எல்லை தாண்டி வருவோரை அவர்களது தஞ்சம் கோரும் உரிமைகளைக் குறைத்து பெரும் எண்ணிக்கையில் ஒன்றாகப் பாரிய தடுப்பு முகாம்களில் அடைத்துவைப்பதற்குப் புதிய சட்டம் இடமளிக்கிறது.
பெலாரஸுடனான தனது சுமார் 679 கிலோ மீற்றர்கள் நீளமான எல்லையில் வேலிக்கு மேலதிகமாகப் புதிய தடுப்புச்சுவர்களை நிறுவ உள்ளதாக லித்துவேனியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பெலாரஸ் நாட்டுக்கு எதிராக விதித்து வருகின்ற தடைகளை லித்துவேனியா ஆதரித்துவருகின்றது. அத்துடன் பெலாரஸின் ஆட்சியாளர்களை எதிர்த்து விமர்சிக்கின்ற அந்நாட்டின் எதிரணியின ருக்கு லித்துவேனியா புகலிடம்அளித்துள்ளது.பெலாரஸ் எதிர்க்கட்சித் தலைவி ஸ்வியாட்லானா (Sviatlana Tikhanouskaya) நாட்டைவிட்டு வெளியேறி லித்துவேனியாவில் வாழ்ந்துவருகிறார். இதனால் இரண்டு நாடுகளுக்கும்இடையே பெரும் பகைமை உருவெடுத்துள்ளது.
அண்மையில் பெலாரஸ் ஆட்சியாளரை எதிர்த்து விமர்சிக்கும் எதிரணிச் செயற்பாட்டாளர் ஒருவரும் அவரது நண்பியும் பறந்து கொண்டிருந்த விமானத்தை பெலாரஸ் அதிகாரிகள் தமது நாட்டுக் குள் வலுக்கட்டாயமாகத் திசை திருப்பித் தரையிறக்கி அவர்களை கைதுசெய்திருந்தனர். அந்தச் சம்பவத்தை அடுத்துஅமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பெலாரஸ் மீது புதிதாகப் பயணத்தடைகளை விதித்தன.
லித்துவேனியா ஐரோப்பிய ஒன்றியத் தின் ஓர் உறுப்பு நாடு என்பதால் முதலில் பெலாரஸ் ஊடாக அங்கு ஊடுருவுகின்ற குடியேறிகள் பின்னர் அங்கிருந்து சட்டவிரோதமாக ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று தஞ்சம் கோருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாடுகள் இடையே ரகசியமாகக் குடியேறிகளைக் கடத்துகின்ற பயண முகவர்கள் பலர் செயற்பட்டு வருகின்றனர். துருக்கியில் இருந்தும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பெலாரஸ் நாட்டுக்கு நுழைவு வீஸாக்களுடன் வருகின்ற குடியேறிகள் பின்னர் அங்கிருந்து அயல் நாடுகள் ஊடாக ஐரோப்பிய எல்லைகளுக்குள் நுழைகின்றனர்.
பெலாரஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெரும் எண்ணிக்கையிலானவெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பல்கலைக்கழகக் கல்விக் கான மாணவர் வீஸா ஊடாக ஆட்களைவெளிநாடுகளுக்கு கடத்துகின்ற பயணமுகவர்களும் அங்கு செயற்பட்டு வருகின்றனர் என்று குடியேறிகளைக் கண்காணிக்கின்ற அமைப்புகள் கூறுகின்றன.
– பாரிஸிலிருந்து குமாரதாஸன்.