காடுகள் எரிந்துகொண்டிருக்க, தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸைத் தொடுகிறது.
கடந்த வருடங்களை விட மோசமான அளவில் காட்டுத்தீக்கள் ஐரோப்பாவின் தெற்கிலுள்ள பிராந்தியங்களில் உண்டாகியிருக்கின்றன. வெப்பநிலையே சீக்கிரமாகவே வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஸ்பெய்ன், கிரீஸ், துருக்கி, இத்தாலி ஆகிய நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் காடுகள் எரிந்துகொண்டிருக்கின்றன.
இத்தாலியில் மட்டும் வார இறுதியில் 800 காட்டுத்தீக்கள் உண்டாகியிருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காகத் தமது நாடுகளைத் திறந்திருக்கும் இந்த நாடுகளின் சில சுற்றுலாப் பயண தலங்களை ஒட்டியும் காட்டுத்தீக்கள் உருவாகியிருப்பதால் விடுமுறையைக் கழிக்கவந்தவர்கள் பலரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டியதாயிற்று. இத்தாலி, துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளில் சுற்றுலாப்பயணிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவேண்டியிருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தசாப்தங்களில் காணாத அளவில் வெப்ப அலைகளும் இந்த நாடுகளின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கின்றன. சில நகரங்களில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸைத் தொட்டுவருகிறது. வரும் நாட்களில் அது மேலும் அதிகமாகுமென்று வாநிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முப்பது வருடங்களில் காணாத வெப்பநிலையை கிரீஸ் காணவிருக்கிறது என்று எச்சரிக்கிறார் நாட்டின் பிரதமர்.
காலநிலை மாற்றங்களின் விளைவுகளே இவை என்றும் நிலைமை மேலும் மோசமாவதை எதிர்பார்க்கலாமென்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்