இரண்டு பில்லியன் தடுப்பூசிகள், கோவாக்ஸ் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர்: சீனாவின் உறுதிமொழி.
வியாழனன்று சீனாவின் ஜனாதிபதி ஷீ யின்பிங் தனது நாடு இந்த வருடம் உலக நாடுகளுக்கு இரண்டு பில்லியன் தடுப்பூசிகளைக் கொடுக்க தன்னாலான முயற்சியைச் செய்யும் என்று குறிப்பிட்டார். அத்துடன் உலகின் வறிய நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்க உதவுவதற்கான கோவாக்ஸ் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர்களை நன்கொடையாகக் கொடுக்குமென்றும் தெரிவித்தார்.
தனது நாட்டில் ஆங்காங்கே சமூகப்பரவலில் இருக்கும் டெல்டா திரிபுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது சீனா. நாட்டின் சில நகரங்களின் குடிமக்கள் அனைவரும் கொரோனாத் தொற்றுக்காகப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்னார் சீனா எதிர்பாராதவிதமாக ஒரு இணையத்தள அறிவிப்பு ஒன்றில் வறிய மற்றும் வளரும் நாடுகள் கொவிட் 19 க்கு எதிராகப் போராடுவதற்காக 3 பில்லியன் டொலர்களைக் கொடுப்பதாகத் தெரிவித்திருந்தது. அந்தத் தொகை நாடுகளின் சமூகங்களில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதற்காகக் கொடுக்கப்படுவதாக சீனாவின் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்