அமெரிக்காவில் 2030 இல் விற்கப்படும் 50 % வாகனங்கள் மின்கல வாகனங்களாக இருக்கவேண்டும் – ஜோ பைடன்.
டெமொகிரடிக் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, காலநிலை மாற்றத்தை ஏற்படுத்திவரும் கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைப்பதாகும். அதற்கு ஒரு வழியாக அமெரிக்காவில் விற்கப்படும் தனியார் வாகனங்களில் 50 விகிதமானவை 2030 இல் மின்கலத்தால் செய்ற்படுபவையாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளை அவர் வியாழனன்று அறிவித்தார்.
அமெரிக்காவின் தனியார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பலரின் கைதட்டலையும் பெற்றிருக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்களின் முழு ஆதரவையும் பெறவில்லை. அவரது அறிவிப்பு ஒரு குறிக்கோளே தவிர உண்டாகிவரும் நிலைமையின் தீவிரத்தைப் புரியவைக்கத் தவறுகிறது என்று அவர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.
தற்போதைய நிலைமையில் விற்கப்படும் தனியார் வாகனங்களில் 3 விகிதமானவை மட்டுமே மின்கலங்களால் இயக்கப்படுபவையாக இருக்கின்றன. தனியார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தமது தயாரிப்பை வேகமாக மின்கல வாகனங்களுக்காக மட்டும் என்று மாற்றிக்கொள்வதாக அறிவித்திருந்தாலும் தொடர்ந்தும் மின்கல வாகனங்களின் விலை சாதாரணர்களுக்கு மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
எனவே, ஜனாதிபதியின் குறிக்கோளை எட்டுவதானால் அமெரிக்க அரசு அந்த எண்ணத்துக்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதுதான் முக்கியம். ஜோ பைடன் கையெழுத்திருக்கும் குறிக்கோள் பட்டயத்தில், 50 விகித மின்கல வாகனங்களை விற்கத் தவறும் வாகனத் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளோ, தண்டங்களோ உண்டாகும் என்று குறிப்பிடப்படவில்லை. அவர்களை அவர்களின் இஷ்டத்துக்கு விட்டிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
சமீபத்தில் ஜோ பைடனால் முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் நாட்டின் போக்குவரத்து அமைப்பைச், செயற்பாடுகளை மாற்றுவதற்காகப் பெருந்தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர மேலும் 170 பில்லியன் டொலரை ஜோ பைடன் அவ்விடயத்துக்குச் செலவிட வேண்டுமென்று கோரிவருகிறார்.
அவர் திட்டத்தின்படி நாடெங்கும் தேவையான இடங்களில் மின்கலங்களுக்கு ஊட்டம்கொடுக்கும் மையங்கள் அமைத்தல் மற்றும் அவ்வாகனங்களை வாங்குகிறவர்களுக்குக் கணிசமான அளவு மான்யம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். தயாரிப்பாளர்களுக்கும் அவர்களுடைய தேவைக்கேற்றபடி உதவித்தொகைகள் அரசால் வழங்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்