பாரிஸ் ஈபிள் கோபுரத்தில் பிரமாண்டமான ஒலிம்பிக் கொடி! வானில் விமானங்கள் அணிவகுப்பு

அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகின்ற பொறுப்பைக் கையளிக்கின்ற உத்தியோகபூர்வ நிகழ்வு ரோக்கியோ – பாரிஸ் நகரங்கள் இடையே நடைபெறவிருக்கின்றது. அதனை முன்னிட்டு பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மிகப் பெரிய அளவிலான ஒலிம்பிக் கொடி ஏற்றப்படவுள்ளது.

ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின்நிறைவு நிகழ்வு ஆரம்பமாகின்ற நேரத்தில் – பிரான்ஸ் நேரப்படி மதியம் ஒருமணியளவில் – ஒலிம்பிக் கொடியேற்றுகின்ற வைபவம் பாரிஸில் ஆரம்பமாகும்.

தொழில்நுட்ப ரீதியான சாதனையாக சுமார் 5ஆயிரத்து 800 சதுர அடி கொண்டபிரமாண்டமான கொடியினை பாரிஸ்நகர மேயர் ஆன் கிடல்கோ ஈபிள் கோபுரத்தில் ஏற்றிவைப்பார். அச்சமயம் விமானப்படையின் சுதந்திர தின அணிவகுப்பு(Patrouille de France) விமானங்கள் கோபுரத்தின் மேலே அணிவகுத்துப் பறக்கின்ற கண்காட்சியும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோபுரத்தின் சூழலில் இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

உதைபந்தாட்ட மைதானத்தின் பரப்பளவுக்கு நிகரான பாரிய ஒலிம்பிக் கொடி சுமார் ஆறு லட்சம் லீற்றர் ஹீலியம்(helium) வாயு நிரப்பப்பட்ட பாய்மரத் துணியினால் தயாரிக்கப்பட்டது என்பதால் அது ஒரு முக்கிய தொழில்நுட்ப சாதனையாகவும் குறிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரத்தில் இடம்பெறவிருப்பது தெரிந்ததே. அதற்கான பாரிய திட்டமிடல்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *