துளையிடல் வெற்றி ஆனால்மண் துகள் சேகரிப்பு தோல்வி.செவ்வாயில் நீடிக்கும் மர்மங்கள்.
செவ்வாய்க் கோளில் தரித்துள்ள ‘விடாமுயற்சி’ (Perseverance) ரோபோ விண்கலம் அங்குள்ள பாறைகளில் துளையிட்டு அவற்றின் மண் மாதிரி களைச் சேகரிக்கின்ற முதலாவது முயற்சியை நிறைவு செய்துள்ளது. அந்த ஆரம்ப முயற்சி வெற்றி, தோல்வியுடன் நிறைவுபெற்றிருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.
அங்குள்ள ஆற்றுப் படுக்கை என்று நம்பப்படுகின்ற பகுதியில் பாறைஒன்றில் ரோபோ விண்கலம் அதன்துளைகருவியோடு இணைந்த இயந்திரக் கரங்கள் மூலம் வெற்றிகரமாக முதலாவது துளையை இட்டிருக்கிறது. (துளையின் காட்சி படத்தில்).
ஆனால் துளையிடும் பணி வெற்றிகர மாக நிறைவடைந்தபோதிலும் திட்டமிட்டவாறு பாறையின் துகள், தூசி மாதிரிகள்(rock samples) ரோபோ கருவியுடன் இணைந்துள்ள சிறிய குழாய்களில் (titanium sample tubes) சேகரிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.அதனால் அறிவியல் குழுவினர் ஏமாற்றமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
செவ்வாயின் புவியியல்அமைப்பு மனித அறிவியல் முயற்சிகளுக்குக் குறுக்கேதொடர்ந்தும் மர்மங்களை விட்டுவைக்கிறது.
செவ்வாயில் இருந்து பூமிக்கு கிடைத்துள்ள தரவுகள் துளையிடும் செயற்பாடுகள் சரிவர நிறைவேறி இருப்பதைக் காட்டியுள்ளன. விண்கலத்தின் இயந்திரசெயற்பாடுகளும் சீராகவே இருந்துள்ளன. மண் மாதிரிகளைச் சேகரிக்க முடியாமற் போனமைக்கான காரணங்களைக் கண்டறிகின்ற முயற்சிகளில் நாசா அறிவியலாளர்கள் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர்.
“தொழில்நுட்பத்தில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. செவ்வாய்தான் ஒத்துழைக்கவில்லை”என்று நாசா தெரிவித்துள்ளது.
துளைக்குள்ளே உடைந்த பாறைப் பகுதிகள் மண்ணாக மாறி உள்ளனவா என்பதை அறிவதற்காக சிறிய கமராஒன்றை துளைக்குள் செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
நாங்கள் “விடாமுயற்சியுடன் தொடர்வோம்” என்று நாசா விஞ்ஞானி ஒருவர் கூறியிருக்கிறார். மேலும் சில பாறைகளில் துளையிடும் செயற்பாடுகள்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன.
சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர் நதி ஒன்று இருந்திருக்கலாம் என அறிவியலாளர்களால் நம்பப்படும் ‘ஜெஸீரோ பள்ளம்'(Jezero Crater) எனப்படுகின்ற ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் நுண்ணிய உயிர்த் தடயங்கள் ஏதாவது கிடைக்கின்றதா என்பதை அறிவதற்காகவே ரோபோ விண்கலம் அந்தப் பகுதியில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
விண்கலம் அங்கு சேகரிக்கவுள்ள மண்மற்றும் பாறைத் துகள்களின் மாதிரிகள்சிறிய விரல் அளவு குழாய்களில் நிரப்பப்படும். அவை பின்னர் செவ்வாய்க் கிரகத்துக்கான அடுத்த விண்வெளிப்பயணம் ஒன்றின் மூலம் 2030 ஆம் ஆண் டில் ஆய்வுகளுக்காகப் பூமிக்கு எடுத்து வரப்படும். பூமிக்கு வெளியே வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற பல நூற்றாண்டு காலமாக நீடிக்கும்கேள்விகளுக்கு அங்கு சேகரிக்கப்படும் மண் மாதிரிகளில் விடை கிடைக்கும் என்று அறிவியல் உலகம் எதிர்பார்த்துள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.