இத்தாலியின் பெர்காமோ நகரத்தில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உறவினர் நஷ்ட ஈடு கோருகிறார்கள்.
கொரோனாத்தொற்றுக்கள் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்ததும் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அங்கே மிக அதிக இறப்புக்களைக் கண்ட நகரங்களில் முதன்மையானது பெர்காமோ. அக்கொடும் வியாதியால் சுமார் ஏழாயிரம் பேர் ஓரிரு மாதங்களில் அங்கே இறந்து போனார்கள்.
தமது துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள இறந்துவிட்டவர்களின் உறவினர்களிடையே பல குழுக்கள் உண்டாகின. அவைகளில் ஒன்றான Noi Denunceremo [கண்டனம் செய்வோர்] என்ற குழுவினர் இத்தாலி முழுவதும் 70,000 அங்கத்தவர்களைத் தமது சமூக வலைத்தளக் குழுவில் சேர்த்துக்கொண்டார்கள். அக்குழுவினர் இத்தாலிய நீதிமன்றத்தில் கொவிட் 19 இழப்புகளுக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கோரியிருக்கிறார்கள்.
இத்தாலிய அரசு படிப்படியாக நாட்டின் மக்கள் ஆரோக்கிய சேவையைப் புறக்கணித்து வந்தது. அதை அரசின் சேவையிலிருந்து விலக்கி ஒரு பகுதியைத் தனியாரிடம் கொடுத்துவிட்டிருந்தார்கள். பல நகரங்களிலும் தனியாரின் கையிலிருந்த மக்கள் ஆரோக்கிய சேவை கொவிட் 19 கொடுத்த அழுத்தத்தைத் தாங்காமல் செயலிழந்தது. எனவே, இத்தாலிய அரசு நாட்டுக்கான ஒரு புதிய மக்கள் ஆரோக்கியக் குறிக்கோளுடன் திட்டமொன்றைக் கொண்டுவரவேண்டும் என்பதே தமது நோக்கம் என்கிறார்கள் அரசை நீதிமன்றத்துக்கு இழுத்திருக்கும் உறவினர்கள் குழு.
செப்டெம்பர் மாதத்தில் அவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் எடுக்கப்படவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்