சித்திரவதைகள், கூட்டுக்கொலைகளுக்காக அறுபது வயதான ஈரானியர் ஒருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
ஈரானில் 1980 களில் அரசு செய்த கூட்டுக் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக ஈரானியரொருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2019 நவம்பரில் சுவீடனில் வாழும் தனது உறவினர்களிடம் விஜயம் செய்ய வந்திருந்த ஹமீத் நூரியை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்து காவலில் வைத்தார்கள். அதையடுத்து அந்த நபர் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படும் சாட்சிகள் பலர் விசாரிக்கப்பட்டு வந்தார்கள்.
1988 இல் ஈரானில் ஆட்சியிலிருந்த ஆயதுல்லா கொமெய்னி திடீரென்று நாட்டின் பல சிறைகளை வெளியாருக்கு மூடிவிட உத்தரவிட்டார். சிறைவைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தமது உறவினர்களைச் சந்திப்பது நிறுத்தப்பட்டது. அதையடுத்த வாரங்களில் நாட்டின் அரசுக்கெதிராகச் செயற்பட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
சிறைக்குள் வைத்துப் பல்லாயிரக்கணக்கானோர் குரூரமான முறைகளில் விசாரிக்கப்பட்டார்கள். சுமார் ஆகக்குறைந்தது 5,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அவ்விசாரணைகள், கொலைகளுக்கான திட்டமிடுதலில் முக்கிய புள்ளியாக இருந்த தற்போதைய ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அவருக்குக் கீழே செயற்பட்டு சித்திரவதை, கொலைகளுக்கான கைதிகள் எவரெவரென்று தேர்ந்தெடுத்தவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஹமீத் நூரி என்று பல ஈரானியர்கள் சாட்சி கூறுகிறார்கள்.
சுவீடனில் நடக்கவிருக்கும் இந்த வழக்கு விசாரணையில் பங்குபற்றிச் சாட்சி கூற ஐரோப்பா, ஆஸ்ரேலியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 70 சாட்சிகள் சுவீடனுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே அரச வழக்கறிஞருக்குக் குறிப்பிட்டிருக்கும் விபரங்கள் கொடூரமான சித்திரவதைகள் என்று குறிப்பிடப்படுகிறது.
சர்வதேச ரீதியில் நடக்கப்போகும் மனிதகுலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றிய இந்த வழக்கு ஏப்ரல் 2022 வரை தொடரும்.
சாள்ஸ் ஜெ. போமன்