“காலத்தைத் திருப்ப முடியாது,” என்கிறது சர்வதேசக் கூட்டுறவிலான காலநிலை கண்காணிப்பு அமைப்பின் ஆறாவது அறிக்கை.
ஆகஸ்ட் 09 ம் திகதி வெளியாகியிருக்கும் உலகக் காலநிலை மாற்றங்கள் பற்றிய அறிக்கையின் விபரங்கள் மனித குலத்துக்கு “உனது நடவடிக்கைகளால் சீரழிந்தவை மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே,” என்ற அதிரடியான செய்தியை விபரங்களுடன் சொல்கிறது. காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து “பாரிஸ் மாநாட்டில்” எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படப் போவதில்லை என்கிறது அந்த அறிக்கை.
அதாவது, உலகின் சராசரி வெப்பநிலை வரவிருக்கும் வருடங்களில் 1.5 செல்சியஸைவிட அதிகமாவதை நிறுத்த முடியாது. பதிலாக வரும் 20 வருடங்களுக்கு அதைவிட அதிகமாகச் சூடாகும். தற்போதைய அளவில் மனிதர்கள் நச்சுவாயு வெளியீட்டைத் தொடர்வார்களாயின் 2100ம் ஆண்டளவில் சராசரியாக 2 செல்சியஸ் அதிகமாகிவிடும். இதற்கு முன்னர் சர்வதேசக் காலநிலை நிலைப்பாடு பற்றி வந்த விபரங்களில் எதிர்பார்க்கப்பட்டது போலன்றி பல மாற்றங்களை நாம் தடுத்து நிறுத்த முடியாது என்கிறது இந்த அறிக்கை.
வெளியாகியிருக்கும் அறிக்கை முழுக்க முழுக்க விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள், புள்ளிவிபரங்களைக் கொண்டு உண்டாக்கப்பட்டவை. அவை இதனால் உலக மக்களுக்கு ஏற்படப்போகுக்ம் நிலையையோ, சமூக விளைவுகளையோ கணக்கிலெடுக்கவில்லை. இந்த அறிக்கையை வாசிப்பதன் மூலம் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை நிலைமையில் ஏற்படப்போகும் தவிர்க்க முடியாத மாற்றங்களை, அழிவுகளை இலகுவாக ஊகிக்கலாம்.
உலகின் சராசரி வெப்பநிலை 2 செல்சியஸால் அதிகரிக்குமாயினும் வெவ்வேறு பகுதிகளில் அது வெவ்வேறு அளவில் மாறுபடும். அதிகரித்துவரும் வெப்பநிலையால் விவசாயமும், மனிதர்களின் ஆரோக்கியமும் பெருமளவில் பாதிக்கப்படும்.
நீரின் சுழற்சியின் வழக்கு மாறுபடும். அதனால் உயரமான இடங்களில் குறுகியகாலப் பெருமழையும், வெள்ளப்பெருக்குகளும் சாதாரணமாகும். பள்ளத்தாக்குகளில் வறட்சி உண்டாகும். பெரும்பாலான விவசாயிகள் எதிர்பார்க்கும் மாரிமழைவீழ்ச்சியின் அளவு பலமாகக் குறையும்.
வெப்பநிலை உயர்வால் ஏற்படும் பனிப்பாறை கரைதல் உலகின் கடல்பரப்பின் உயரத்தை அதிகரிக்கும். கடலோர, நீர் நிலையின் அருகிலான பகுதிகளில் நிலம் அரிக்கப்படுவது அதிகரிக்கும். அதனால் இன்று மக்கள் நெருக்கமாக வாழும் கடலோர நகரங்கள் பல மக்கள் வாழமுடியாதவையாக மாறிவிடும்.
காலநிலை மாற்றங்களின் வேகம், விளைவுகளை மனிதர்கள் மாற்றவேண்டுமானால் மிகப்பெரிய மாற்றங்கள் உலகில் செய்யப்படவேண்டும். அந்த மாற்றங்கள் அதிவேகமாகச் செய்யப்படவேண்டும் என்கிறது விஞ்ஞானிகளின் அறிக்கை. மோசமான விளைவுகளுக்கு அதிமுக்கிய காரணியாக இருக்கும் நச்சுவாயுகளின் வெளியேற்றத்தை மனிதர்கள் அதிக அளவில், வேகமாகக் குறைக்கவேண்டும். கரியமிலவாயுவே [75%] காலநிலை வேகமாக வெம்மையடையக் காரணமாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்