லூசிபர் என்ற பெயரிலான வறட்டியெடுப்பும் வெப்ப அலை ஸ்பெய்ன், போர்த்துக்கலை நோக்கி நகர்கிறது.
சிசிலி, இத்தாலியில் புதனன்று ஐரோப்பிய வெப்பநிலையின் அதியுயர்ந்த வெப்பநிலையான 48.8 பாகை செல்சியஸ் அளக்கப்பட்டதாக அப்பிராந்தியத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அது உண்மைதானா என்று சர்வதேச வாநிலை ஆராய்ச்சி மையம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதற்கு முன்னர் 1977 இல் ஏதன்ஸ் அனுபவித்த 48 பாகை செல்சியஸே ஐரோப்பா கண்ட அதியுயர்ந்த வெப்பநிலையாகும்.
கடந்த சில நாட்களாக இத்தாலி கடும் வெப்பநிலையை அனுபவித்து வருகிறது. வரும் நாட்களிலும் அது தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது. ரோம், பொலோனியா, புளோரன்ஸ் நகரங்களில் வெப்பநிலையினால் பாதிக்கப்படாமலிருக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மத்தியதரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளான துருக்கி, சைப்ரஸ், அல்ஜீரியா, கிரீஸ் போன்று இத்தாலியின் சுமார் 15 நகரங்களும் இந்த வெப்ப அலையின் தாக்கத்தை அனுபவித்து வருகின்றன.
இந்த வெப்ப அலைக்கு லுசிபர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த அலை போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளை நோக்கி வியாழனன்று முதல் நகருமென்று வாநிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன. ஸ்பெய்னில் பல இடங்களில் வெப்பநிலை 44 செல்சியஸை எட்டும் என்று அறிவிக்கப்படுகிறது. போர்த்துக்கலின் பிரதமர் நாட்டின் காடுகளில் தீப்பிடிக்கலாம் என்று எச்சரித்திருக்கிறார். 2017 ம் ஆண்டில் காட்டுத்தீயால் அங்கே சுமார் 100 பேர் இறந்ததை அவர் சுட்டிக்காட்டி மக்களைக் கவனமாக இருக்கும்படி எச்சரித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்