சாம்சுங் நிறுவனத்தின் உப அதிபர் ஜேய் Y. லீ சிறையிலிருந்து வெளியே வந்தார்.
உலகின் பணக்காரர்கள் வரிசையில் 202 இடத்திலிருந்தவர் சுமார் 11.4 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான சாம்சுங்கின் உப அதிபர் ஜேய் Y. லீ. லஞ்ச ஊழல், ஏமாற்று மற்றும் வரி ஏய்ப்புக்கள் செய்த குற்றத்துக்காக இரண்டரை வருடம் உள்ளே தள்ளப்பட்டார். ஆனால், ஏழே மாதங்களில் அவர் கட்டுப்பாடுகளுடன் சிறையிலிருந்து வெளியே விடப்பட்டிருக்கிறார்.
“நான் நாட்டு மக்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்துவிட்டேன் என்னை மன்னியுங்கள்! என் மீது இருக்கும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கடுமையாக உழைப்பேன். வெவ்வேறு தரப்புகளின் கருத்துக்களையும், பிரச்சினைகளையும் கேட்டுக் கடமையாற்றுவேன்,” என்று பகிரங்கமாகத் தலைகுனிந்து கேட்டுக்கொண்டார் ஜேய் Y. லீ.
இதே குற்றங்களுக்காக அவர் ஏற்கனவே ஒரு தடவை 2017 இல் ஐந்து வருடச் சிறைத்தண்டனை பெற்றவராகும். அதை மேன்முறையீடு செய்து ஒரு வருடம் சிறையில் இருந்துவிட்டு வெளியேறியவர். ஆனால், மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட அவ்வழக்கில் தண்டனை பெற்று ஜனவரியில் சிறையிலடைக்கப்பட்டார்.
தென் கொரியாவின் வர்த்தகத் துறைகளில் கொரோனாத் தொற்றுக்காலத்தில் தலைமை தாங்கும் நிர்வாகிகளுக்காகக் கடும் வரட்சி ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனால் அரசியல்வாதிகள், வர்த்தக நிர்வாகிகள் பலர் சிறைவாசத்தில் தண்டிக்கப்பட்ட முக்கியஸ்தவர்கள் பலரை மன்னித்து விடுவிக்கும்படி கேட்டுக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
வர்த்தக நிறுவனங்களில் உயர்மட்டங்களிலிருந்துகொண்டு செய்யும் சட்டத்துக்கெதிரான நடவடிக்கைகளுக்காகத் தென் கொரியப் பெரும் புள்ளிகள் தண்டிக்கப்படுவதோ, விடுவிக்கப்படுவதோ இது முதல் தடவையல்ல. சாம்சுங் நிறுவனத்தின் மறைந்த நிர்வாகத் தலைவர் லீ குன் ஹீ இரண்டு தடவைகள் வரி ஏய்ப்பு, லஞ்ச ஊழல்கள், ஏமாற்று வேலைகளுக்காகத் தண்டிக்கப்பட்டார். ஆனால், “நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவியவர்,” என்று ஜனாதிபதி – மன்னிப்புப் பெற்றார்.
ஜேய் Y. லீ விடுதலை செய்யப்படுவதைக் கொண்டாடும் முகமாக சாம்சுங் நிறுவனம் தாம் தொழிற்சாலையின் நான்கு தொழிற்சங்கங்களுடன் அவர்களுடைய அங்கத்தவர்களின் சுபீட்ச நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்களைச் செய்துகொண்டதாக அறிவித்தது.
கட்டுப்பாடுகளுடன் வெளியே வந்திருக்கும் ஜேய் Y. லீ தனது பதவியில் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர முடியாது என்பது நீதிமன்றக் கட்டளை. அத்துடன் அவர் மீது தொடர்ந்தும் வேறு வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்