மருத்துவப் பணியால் மக்கள் மனங்களில் நிறைந்த டொக்டர்.கதிரவேற்பிள்ளை அவர்கள் உலகை விட்டுப் பிரிந்தார்
யாழ்மாவட்டத்தில், வடமராட்சி ,தெல்லிப்பளை, போன்ற மருத்துவமனைகளினூடாக மருத்துவப்பணியால் மக்கள் மனங்களை வென்ற முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கதிரவேற்பிள்ளை அவர்கள் உலகை விட்டுப்பிரிந்தார்.
போராட்ட காலங்களில் மிகவும் சவாலான நாள்களில் அவரின் பொறுப்பு வாய்ந்த பதவியை முற்றிலும் மக்கள் நலனுக்காகவே செலவிட்ட அந்த உன்னத மனிதரை பற்றி தமிழுலகம் அவரின் இழப்பின் பின் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறது
அவரின் ஓய்வுக்காலம் வரை நீண்டகாலமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரியாக (DMO) திறம்பட கடமையாற்றிய முதுபெரும் வைத்தியர் Dr.S.கதிரவேற்பிள்ளை அவர்கள் ஆவணிமாதம் 13ம் திகதி 2021ம் ஆண்டு தனது 88 ஆவது வயதில் இவ்வுலகைப் பிரிந்தார்.
அந்தக்காலத்தில் இவரின் காலங்களில் இருந்த ஆளணிவளக்குறைபாடுகள்,பௌதீகவள இடர்பாடுகள்,பொருளாதார தடைகள்,மருந்து தட்டுப்பாடுகள் என சுற்றியிருந்த தடைகள் எல்லாவற்றையும் தன்னால் முடிந்தவகையில் கையாண்டு மக்களுக்கான பணியை ஆற்றியவர் இவர்.இக்கட்டான இடர் சூழ்ந்த கால கட்டங்களிலும் தான் நிர்வகித்த வைத்தியசாலைகளை திறம்பட நிர்வகித்த மிகச்சிறந்த நிர்வாகி இவர். எந்த வேளையிலும் வைத்தியசாலைக்கு வருகைதந்து சேவை செய்த ஒரு மனிதநேயப் பண்பாளரும் கூட.
இயற்கையால் பேரிடர்கள்,ஊரெங்கும் ஊரடங்குச்சட்டம் அதிகரித்திருந்த காலங்களில் மக்களோடு மக்களாக நின்று, தன் ஊழியர்களோடும் இணைந்து நின்று மனிதாபிமானப் பணியாற்றியவர் DMO டொக்டர் கதிரவேற்பிள்ளை அவர்கள்.
ஆன்மீகம்,தமிழ்,சமூகம் என அனைத்துத்துறைகளிலும் ஆற்றலாளராக மிளிர்ந்தவர் டொக்டர் கதிரவேற்பிள்ளை அவர்கள்.ஆலய நிகழ்வுகளில் குறிப்பாக இவர் ஆற்றிய ஆன்மீக உரைகள், விருந்தினராக பாடசாலைகளில் ஆற்றிய வழிகாட்டும் பேருரைகள் பல இன்றும் நினைவில் நிற்கின்றன.
மக்கள் மனங்களில் நிறைந்து தன் காலத்தை வரலாற்றில் பதிவு செய்து இவ்வுலகில் இருந்து விடைபெற்ற DMO என்று மக்களால் அழைக்கப்பெற்ற வைத்தியர் டொக்டர் கதிரவேற்பிள்ளை அவர்களை நினைவில் கொள்கிறது வெற்றிநடை இணையம்.