கொவிட் 19 சான்றிதழ், பயணங்கள், பொது இடங்களில் கட்டாயம் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிறது.
செப்டம்பர் மாதம் 15 திகதி முதல் நாட்டில் கொவிட் 19 சான்றிதழ்கள் பொது இடங்கள் பலவற்றிலும் அவசியம் என்று சிறீலங்கா அரசு வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. சில நாடுகளில் போன்று ஒரு தடுப்பூசி மட்டுமல்ல இரண்டு தடுப்பூசிகளும் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே மாகாணங்களுக்கிடையே பயணிக்கலாம். அத்துடன் பொதுமக்கள் புழங்கும் இடங்களுக்குள் நுழையவும் அந்தச் சான்றிதழ் கட்டாயம் என்று மக்கள் ஆரோக்கியம் பேணுவதை முடிவுசெய்யும் குழுவின் ஆலோசனையுடன் அரசு அறிவித்திருக்கிறது.
நாட்டில் படு வேகமாகப் பரவிவரும் டெல்டா திரிபின் தாக்குதலால் சிறீலங்கா இந்தப் பெரும்தொற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. புதனன்று நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,000 க்கும் அதிகம். ஒரே நாள் இறப்பின் எண்ணிக்கை 156 என்று அறிவிக்கப்பட்டது.
மற்றைய பாகங்களை விட நாட்டின் மேற்குப் பகுதியில் பரவிவரும் டெல்டா திரிபே 75 விகிதமானவர்களைப் பாதித்திருப்பதாகத் தெரியவருகிறது. நாட்டில் ஏற்கனவே இருந்துவரும் நகரங்களுக்கிடையேயான பயணக்கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டப்பட்டிருக்கின்றன.
சிறீலங்காவின் 21 மில்லியன் குடிமக்களில் சுமார் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் இரண்டும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சீனாவிலிருந்து வந்த தடுப்பூசிகள், அஸ்ரா செனகா, ஸ்புட்நிக், பைசர் பயோன்டெக்கின் தடுப்பு மருந்துகள் அங்கே பாவனையிலிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்