அரசியல் பூகம்பங்களாலும், குற்றங்களாலும் தளர்ந்திருக்கும் ஹைத்தியில் பூகம்பம்.
கரீபியப் பிரதேசங்களெங்கும் உணரக்கூடிய பலமான பூமியதிர்ச்சியொன்று ஹைட்டியின் மேற்குப் பாகத்தைத் தாக்கிப் பலமான சேதங்களை விளைவித்திருக்கிறது. முதலில் 7.2 ரிக்டர் அளவிலான ஒரு பூமியதிர்ச்சியும், அதையடுத்து 5.9 ரிக்டர் அளவிலான மேலுமொரு பூமியதிர்ச்சியும் அங்கே ஏற்பட்டிருக்கின்றன.
ஹைட்டி நேரப்படி சனியன்று காலை சுமார் 8.30 பலமான முதலாவது பூகம்பம் ஏற்பட்டது. அது மேற்கு ஹைட்டியின் Petit Trou de Nippes என்று நகரிலிருந்து எட்டுக் கி.மீ தூரத்தில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது.
நாட்டின் பிரதமரான ஏரியல் ஹென்றி ஹைட்டியின் பல பகுதிகளிலும் இப்பூகம்பம் கடும் சேதங்களை விளைவித்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். நாட்டின் தென் பகுதியில் தான் ஆகக் கூடுதலான சேதங்க்ள் ஏற்பட்டிருப்பதாகவும் நாட்டின் சகல சக்தியையும் ஒன்றுகூட்டி மீட்புப் பணிகளில் இறங்கவேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுவரை வந்திருக்கும் விபரங்களின்படி 304 பேர் இறந்திருப்பதாகவும் சுமார் 1,800 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு ஹோட்டலும், தேவாயமும், மேலும் பல வீடுகளும் முழுசாக இடிந்து விழுந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக ஹைத்திக்கு உதவிகளை அனுப்பிவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
2010 ஹைட்டியில் உண்டாகிய பூகம்பமொன்று நாட்டின் தலைநகரைப் பெரும்பாலும் இடிபாடுகளாக மாற்றியது. தற்போதைய பூகம்பத்தில் அந்த நகரம் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 2010 பூகம்பத்தில் சுமார் 250,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தார்கள். நாடு அந்த அழிவிலிருந்து இன்னும் விடுபடாமலேயே இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்