ஜெருசலேமில் ஐந்து காட்டுத்தீக்கள் கட்டுக்கடங்காமல் எரிந்து பரவி வருகின்றன.
இஸ்ராயேலில் ஜெருசலேமில் பல காட்டுத்தீக்கள் உண்டாகி ஞாயிறன்று மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பக்கத்திலிருக்கும் சமூகங்களிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றும் நிலைமை உண்டாகியிருக்கிறது. கடுமையான காற்றுடன் சேர்ந்த அதீத வெப்பநிலையால் காட்டுத்தீக்களைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லையென தீயணைக்கும் படையினர் குறிப்பிடுகிறார்கள்.
காட்டுத்தீக்கள் ஏற்கனவே சுமார் 4,200 ஏக்கர்களில் தனது வழியில் அகப்பட்டதையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கி விட்டிருக்கின்றன. ஜெருசலேமின் மேற்குப் பகுதியை நோக்கி வீசும் காற்றுடன் அது தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால், அப்பகுதியில் நச்சுக் காற்று மண்டலம் உண்டாகியிருக்கிறது. அப்பகுதியில் சில குடியிருப்புக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றன, பொது இடங்கள் மூடப்பட்டன.
தீயணைப்பில் ஈடுபட்டிருந்தவர் ஒருவர் எரிகாயத்துக்கு உள்ளாகிச் சிகிச்சை பெற்று வருகிறார். குடிமக்கள் இருவர் காணாமல் போயிருக்கிறார்கள். குடியிருப்புக்கள் சிலவற்றில் வானமே கறுப்பாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிறன்று நடந்துகொண்டிருந்த அமைச்சர்களின் சந்திப்பை இடையில் நிறுத்திக்கொண்டு நாட்டின் பிரதமர் நப்தலி பென்னட் தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினரின் உயரதிகாரிகளைச் சந்தித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடாத்தினார்.
சாள்ஸ் ஜெ. போமன்