பூகம்பத்தால் தாக்கப்பட்ட ஹைட்டியர்களை நோக்கி நகர்கிறது தன் பெயருக்குப் பொருத்தமற்ற கிரேஸ் புயல்.
ஹைட்டியில் பூகம்பத்தால் இறந்துபோனதாக ஞாயிறன்று காலை வந்திருந்த செய்திகளின் எண்ணிக்கை இதுவரை நான்கு மடங்குகளாக அதிகரித்து 1,297 ஆகியிருக்கிறது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட இடங்களுடனெல்லாம் முழுவதுமாகத் தொடர்புகள் நிர்மாணிக்கப்படாததால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,800 க்கும் அதிகம்.
வீதிகளெங்கும் அழுது புலம்பும் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். உறவினர்களிடம் தங்குமிடம் தேடுகிறவர்கள், மருத்துவ உதவி தேடுகிறவர்களுக்கு அவைகள் கிடைப்பது அருமையாக இருக்கிறது. சர்வதேச உதவி அமைப்புக்கள் இதுவரை பாதிப்படைந்த பகுதிகளுக்குச் செல்லவோ, உதவவோ ஆரம்பிக்கவில்லை. உள்நாட்டிலிருந்து பாதிக்கப்பட்ட பிராந்தியங்களுக்கு உதவிகளைச் செய்வதற்கு இடையூறாக நாட்டின் குற்றவியல் குழுக்கள் இருப்பதாக அரச செய்திகள் குறிப்பிடுகின்றன. உதவிப் பொருட்களை அவர்கள் வழியில் கொள்ளையடித்துவிடலாம் என்பதால் இன்னும் அதைப் பரந்த அளவில் ஆரம்ப முடிக்காமல் தவிக்கிறது அரசு.
வெளிநாட்டு உதவிகள், மனிதாபிமான அமைப்புகளின் உதவிகள் கடற்கரை மூலமாக வெவ்வேறு இடங்களுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுவரை வந்து சேரவில்லையென்று அரச செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதே சமயம் மரத்தால் விழுந்தவர்களை மாடேறி மிதிப்பது போல ஹைட்டியை நோக்கி நகருகிறது கிரேஸ் [Grace] என்ற புயல்காற்று. திங்களுக்கும், செவ்வாய்க்குமிடையே அந்தப் புயல் கடும் காற்றுடன் மழையையும் இழுத்துக்கொண்டு ஹைட்டியைத் தாக்கவிருப்பதாக வானிலை எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரசியல் இழுபறி, அரசையே தளம்பவைக்கும் குற்றவியல் குழுக்கள், பரவி வரும் கொவிட் 19 தொற்றுக்கள் ஆகியவைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் வறிய நாடான ஹைட்டி மீண்டுமொருமுறை 2010 பூகம்பத்தைப் போன்று பல முனைகளில் தாக்கப்படுமா என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் பூகம்பத்தை அடுத்துத் தாக்கிய வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளுடன் கொவிட் 19 உம் சேர்ந்து ஹைட்டி மக்களைத் தாக்கக்கூடும் என்று மனிதாபிமான அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்