“ஆப்கானர்களே பங்குபற்ற மறுக்கும் போரில் அமெரிக்கர்கள் போரிட்டு மடியத் தேவையில்லை” – ஜோ பைடன்
திங்களன்று இரவு ஜனாதிபதி, ஆப்கானிஸ்தான் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை அமெரிக்க மக்களுக்குத் தெளிவாகக் குறிப்பிட்டார். அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தைத் திரும்பச் செய்யத் தான் எடுத்த முடிவில் திடமாக இருப்பதாக அவர் கூறினார்.
“ஆப்கானிஸ்தானில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது எங்கள் நோக்கமாக என்றுமே இருந்ததில்லை. அங்கே ஒன்றுபட்ட மத்திய அரசையும், ஜனநாயக நாட்டையும் கட்டியெழுப்ப நாம் உத்தேசித்ததில்லை. ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் பங்குபற்ற மறுக்கும் போரில் ஈடுபட்டு அமெரிக்க இராணுவத்தினர் இறக்கவேண்டியதில்லை. அவர்கள் தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான கருவிகளையெல்லாம் நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். அவர்களுடைய எதிர்காலத்தை அமைக்கத் தேவையான உறுதியான மனத்தை எங்களால் கொடுக்க முடியாது…..” என்றார் ஜோ பைடன்
செப்டம்பர் 11, 2001 இல் அல் கைதா அமெரிக்காவைத் தாக்குபவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அரசு தனது நாட்டை தளமாக்க அனுமதித்தது. அதைத் தண்டிக்கவும் அந்த இயக்கத்தை அடியோடு ஒழிக்கவுமே அமெரிக்கா அங்கே தனது இராணுவத்தை அனுப்பவேண்டியிருந்தது. அந்த நோக்கம் பூர்த்தியாகிவிட்டதால் அங்கே அமெரிக்கப் படைகள் தொடர்ந்தும் இருப்பது அனாவசியம் என்பதே ஜோ பைடனின் நிலைப்பாடாகும்.
அமெரிக்காவின் படைகளைத் திருப்பியெடுப்பது முன்னரிருந்த அரசால் தனது அரசுக்கு விட்டுச்செல்லப்பட்ட முடிவாகும் என்பதையும் பெரும்பாலான அமெரிக்கர்களின் ஆதரவும் அதற்கு இருந்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“மேலுமொரு வருடம் அல்லது மேலும் ஐந்து வருடங்கள் அல்லது 20 வருடங்கள் அமெரிக்க இராணுவம் அங்கே இருந்திருந்தாலும் எந்தவித மாற்றங்களும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை,” என்றார் அவர்.
அமெரிக்காவின் இராணுவத் திருப்பியெடுத்தல் அமெரிக்காவுக்குள் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், தனது பேச்சில் தான் எடுத்த முடிவில் தான் தெளிவாக இருப்பதாக அவர் காட்டியதை அவரது கட்சியின் பெரும்பாலானோர் ஆதரிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்