தலிபான் இயக்கங்களுக்கெதிரான ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகிறார்கள் எதிரணியினர்.
பஞ்சீர் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தானின் தலிபானர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்துக்குப் படை திரட்டி வருகிறார் முன்னாள் ஆப்கானிய ஜனாதிபதி அம்ருல்லா சாலே. தலிபான் இயக்கத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியபோது தான் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானிலேயே இருப்பதாகவும் ஆப்கானிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டின் தலைமை தன்னிடமே இருப்பதாகவும் 48 வயதான அம்ருல்லா சாலே டுவிட்டியிருந்தார்.
உயிரே போனாலும் தான் தலிபான் இயக்கத்தினரிடம் சரணடையப் போவதில்லையென்று அம்ருல்லா சாலே சூழுரைக்கிறார். சில ஆயிரக்கணக்கான ஆப்கானிய இராணுவ வீரர்களும், தலிபான்களுக்கு எதிரானவர்களும் பஞ்சீர் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டு வருவதாக உறுதி செய்ய முடியாத செய்திகள் குறிப்பிடுகின்றன. தற்போதைய நிலைமையில் தலிபான் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆப்கானிஸ்தானியப் பிரதேசம் பஞ்சீர் பள்ளத்தாக்கு மட்டுமே. சோவியத் யூனியன் 1979 இல் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபோதும் அப்பிராந்தியத்துக்குள் அவர்களால் நுழைய முடிந்ததில்லை.
பஞ்சீர் பள்ளத்தாக்கு காபுலுக்கு வடக்கில் சுமார் 150 கி.மீ தூரத்திலிருக்கும் பகுதியாகும். தலிபான்களுக்குப் பயந்தோடிய பல்லாயிரக்கணக்கான மக்களும் அடர்ந்த காடுகளுள்ள அப்பகுதிக்குத் தப்பியோடியிருக்கிறார்கள். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லாஹ் முஹம்மதுவும் சாலேக்குத் தமது ஆதரவைக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
தாஜிக் இனத்தவரான சாலே பஞ்சீர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்தவர். 2010 வரை ஆப்கான் அரசின் உளவு ஸ்தாபனத்துக்குத் தலைவராக இருந்தவர். 20 வருடங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியிலிருந்தபோது அவர்களை வீழ்த்தத் திரண்ட ஆயுதப் போராளிகளுக்குத் தலைமை தாங்கிய அஹ்மத் ஷா மசூதுக்குக் கீழே போராடியவர் சாலே.
அந்தப் பிராந்தியம் எப்போதுமே தலிபான்களுக்கு எதிரானவர்களைக் கொண்டதாகும். 1996 இல் பதவிக்கு வந்ததும் சாலேயின் சகோதரியைச் சிறைப்பிடித்த தலிபான் இயக்கத்தினர் அவரைச் சித்திரவதை செய்து கொன்றார்கள். 2001 இல் அஹ்மத் ஷா மசூத் கொலை செய்யப்பட்டார். அவ்வியக்கத்தின் ஆதரவுடனேயே அமெரிக்க இராணுவம் தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு அவர்களை விரட்டியது.
சாள்ஸ் ஜெ. போமன்