சூடானின் 30 வருடச் சர்வாதிகாரி ஒமார் அல் – பஷீர் சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படுவார்.
மனிதகுலத்துக்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், கூட்டுக்கொலைகள் செய்தவைக்காக சர்வதேச நீதிமன்றத்தால் 2009 முதல் விசாரணைக்குத் தேடப்படுபவர் ஒமார் அல் – பஷீர். தனது இராணுவத்தினராலேயே கவிழ்க்கப்பட்டு 77 வயதில் தற்போது கார்ட்டூனில் சிறையிலிருக்கிறார்.
ஒமார் அல் – பஷீரை நீதிமன்ற விசாரணைக்காகத் தம்மிடம் கையளிக்கும்படி கேட்கச் சர்வதேச நீதிமன்றத்தின் பொது வழக்கறிஞர் கரீம் கான் சூடானுக்குச் சென்று சூடான் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார். அதன் பின்னர் சூடானின் வெளிவிவகார அமைச்சர் மரியம் அல்-மஹ்தி அதற்கு சூடானின் மந்திரி சபை ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். டார்பூரில் நடாத்தப்பட்ட போரில் 300,000 பேர் கொல்லப்பட்டதற்கான விசாரணைக்காக ஒமார் அல்-பஷீரை ஹாக் நகரில் விசாரணைக்கு அனுப்புவது பற்றி சூடானின் ஆட்சிக் குழுவின் அனுமதியையும் பெறவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பிட்ட அக்குழுவில் இராணுவத்தின் உயர்மட்டத்தினர் தவிர பொதுமக்களின் முக்கியஸ்தர்களும் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள்.
ஒமார் அல் – பஷீர் தவிர அவரின் மனித வள அமைச்சராக இருந்த அஹ்மத் ஹரூன், உள்துறை விவகாரச் செயலாளர் அப்துல்ரஹ்மான் முஹம்மது ஹுசேன் மற்றும் அவர்களால் டார்பூர் பொதுமக்களைக் குறிவைத்துக் கொல்வதற்காக பொருளுதவியுடன் பதவியிலமர்த்தப்பட்ட ஆயுதக்குழுத் தலைவர் அலி குஷெய்ப் ஆகியோரும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள்.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் நிறுவப்பட்டது முதல் அது ஆபிரிக்காவின் தலைவர்களையே கூண்டில் நிறுத்திவருவது பற்றிச் சில ஆபிரிக்கத் தலைவர்கள் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். அதனால், சில ஆபிரிக்க நாடுகள் அந்த நீதிமன்றத்தின் அமைப்பிலிருந்து விலகப்போவதாக விமர்சித்து வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்