தலிபான் ஆட்சி 2:0 அல்ல அது வெறும் 1:1 தான் என்பதை முதல் நாளிலிருந்தே வெளிப்படுத்தி வருகிறார்கள்.
கடந்த முறை ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்தபோது நடந்துகொண்டதை விடப் பல விடயங்களிலும் தலிபான் இயக்கத்தினர் மாறியிருக்கிறார்கள். தாம் ஒரேயொரு அமைப்பல்ல பல இயக்கங்களே என்பதைத் தெரியாதபடி ஒரு கவர்ச்சியான முகத்தை வெளிநாடுகளுக்குத் தமது வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே சொல்லிக்கொள்வதுக்கு எதிராகத் திரைக்குப் பின்னால் பழிவாங்கும் நடவடிக்கைகளில் முதலாவது நாளிலிருந்தே ஈடுபட்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஐ.நா-வின் அங்கங்களுக்குத் தேவையான இரகசிய விசாரணை விபரங்களை வழங்கும் நோர்வீஜிய அமைப்பான Rhipto தான் தலிபான்கள் தாம் ஆட்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்தே வீடு வீடாகச் சென்று நடாத்திவரும் வேட்டைகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. முன்னாள் அரசின் முக்கிய புள்ளிகளையும், வெளிநாட்டு அதிகாரங்களுடன் சேர்ந்து வேலை செய்தவர்களையும், ஊடகங்களில் முக்கிய பதவிகளிலிருந்தவர்களையும் முக்கிய நகரங்களில் தலிபான் குழுக்களின் உளவாளிகள் தேடிவருகிறார்கள்.
பதவியை இம்முறை கைப்பற்றியிருக்கும் தலிபான் இயக்கத்தினரிடம் கட்டுக்கோப்பான அமைப்பு, உளவு அமைப்பு, ஊடகங்களுடன் தொடர்புகொள்ளும் அமைப்பு, இராணுவம், பேச்சுவார்த்தை நடாத்தும் அமைப்பு ஆகியவை தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் தலையாக இஸ்லாமிய ஷரியா சட்டங்களைத் தெளிவுபடுத்தும் மதத்தலைமை இயங்குகிறது.
தலிபான்களின் உளவு அமைப்பிடம் முன்னாள் ஆட்சில் குறிப்பிட்ட துறைகளிலிருந்தவர்களைப் பற்றிய சகல விபரங்களும் கறுப்புப் பட்டியல் ஒன்றில் இருப்பதாகத் தெரியவருகிறது. அவர்களை வீடு வீடாகத் தேடிக் கைது செய்து வருவதாகவும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்துச் சிறையில் அடைப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. அவர்களில் சிலர் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஜேர்மனியில் ஊடகத்துறையில் வேலைசெய்யும் ஆப்கானியப் பத்திரிகையாளரின் உறவினரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஜேர்மனிய உதவியுடன் நடாத்தப்பட்ட ஊடகங்களின் முக்கியத்துவர்களை வீடுகளில் சென்று தலிபான் உளவாளிகள் தேடியதாகவும் ஜேர்மனி தெரிவிக்கிறது.
சர்வதேசத்துடன் நல்லுறவு, முன்னாள் அதிகாரத்தில் சேவை செய்தவர்கள் மீது பழிவாங்கல்கள் நடக்காது என்றெல்லாம் தலிபான் பிரதிநிதிகள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துத் தாம் இந்த முறை ஒரு வித்தியாசமான ஆட்சிமுறையைக் கடைப்பிடிக்கப்போவதாகக் குறிப்பிட்டாலும் நிஜத்தில் அவர்களின் குரூரத்தனம் மாறவில்லை என்று இன்று பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்