நாட்டில் ஆங்காங்கே பரவிவந்த டெல்டா திரிபைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தது சீனா.
உலகின் முதலாவது நாடாக கொவிட் 19 ஐ எதிர்கொண்டு, கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து அதை ஒழித்துக்கட்டியிருந்தது சீனா. ஜூலையின் நடுப்பகுதியில் நான்ஜிங் விமான நிலைய ஊழியர்கள் சிலருக்குத் தொற்று ஏற்பட்டிந்தது தெரியவந்தது. அது டெல்டா திரிபாக இருந்தது, நாட்டின் வேறு சில நகரங்களிலும் சமூகத்தொற்றாகப் பரவியிருந்தது பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாகச் சீனாவின் மக்கள் ஆரோக்கிய சேவைகள் முடுக்கிவிடப்பட்டன. தொற்றுக் காணப்பட்ட நகரங்கள் மக்கள் நடமாட்டத்துக்கு முடக்கப்பட்டு மில்லியன் அளவில் மக்களிடையே தொற்று இருக்கிறதா என்று பரிசோதனைகள் நடாத்தப்பட்டன. சுமார் ஆயிரம் தொற்றுக்கள் ஒரு டசின் நகரங்களில் காணப்பட்டன.
குறிப்பிட்ட நகரங்களில் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவந்து ஐந்து வாரங்களாப் போராடி வந்தது சீன. தொற்றியிருந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்து திங்களன்று எவருக்கும் புதியதாகத் தொற்று ஏற்படவில்லையென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டு மக்களில் சுமார் 80 விகிதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. அவைகள் டெல்டா திரிபுக்கெதிரான 60 % விகித பாதுகாப்பைக் கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே ஒரு பகுதியினருக்கு மூன்றாவதாக ஒரு தடுப்பூசியும் கொடுக்கப்பட்டு வருகிறது. தொற்றுப் பரவலைச் சரியான நேரத்தில், கண்டுபிடித்து ஒழுங்கான நடவடிக்கை எடுக்காத சீன அதிகாரிகள் நீதியின் முன்னர் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள்.
மொத்தச் சனத்தொகைக்கும் இவ்வருட இறுதிக்குள் தடுப்பு மருந்துகள் கொடுத்துவிடலாமென்று சீன மக்கள் ஆரோக்கிய அமைச்சு எதிர்பார்க்கிறது. அத்துடன் தொடர்ந்தும் வெளியேயிருந்து பரவல்கள் வராமல் கண்காணித்து, மக்களுக்குத் தொற்றுநோக்கெதிரான மந்தைப் பாதுகாப்பு பலத்தை உண்டாக்குவதே சீனாவின் நோக்கம்.
சாள்ஸ் ஜெ. போமன்