இந்தோனேசியா மீண்டும் பாமாயில் தயாரிப்பை அதிகரிக்கும் திட்டங்களில் இறங்கவிருக்கிறது.
மழைக்காடுகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில் உலகின் மூன்றாவது இடத்திலிருக்கும் நாடு இந்தோனேசியா. உலகின் சுவாசப்பை என்று கருதப்படும் மழைக்காடுகள் உலகின் காலநிலை வெம்மையாகாமல் கட்டுப்படுத்துவதற்கு அவசியமானவை. எனவே, வேகமாக அழிக்கப்பட்டு வருவதைத் தடுக்கும் நோக்குடன் இந்தோனேசியா செப்டெம்பர் 21 வரை மூன்று வருடங்களாகத் தனது பாமாயில் தயாரிப்பு அதிகரிப்பை நிறுத்தி வைத்திருந்தது.
எமது பாவனைப் பொருட்கள் பலவற்றிலும் மூலப்பொருட்களிலொன்றாகப் பாவிக்கப்படும் பாமாயில் தயாரிப்புக்காக வெட்டப்படும் காடுகளாலேயே வருடாவருடம் உலகின் 2 % காடுகள் குறைகின்றன. 2001 – 2017 இடைவெளியில் இந்தோனேசியாவில் அழிக்கப்பட்ட காடுகளின் அளவானது ஐக்கிய ராச்சியத்தின் மொத்தப் பரப்பளவுக்கு ஒப்பானதாகும்.
இந்தோனேசியாவோ உலகின் பாமாயில் தயாரிப்பில் முதலாவது இடத்தை வகிக்கிறது. மலேசியாவுடன் சேர்த்தால் உலகின் 80 % பாமாயில் அவ்விரண்டு நாடுகளிலேயே தயாரிக்கப்படுகிறது. தனது தயாரிப்பை அதிகப்படுத்தாமல் நிறுத்திவைப்பதாக அறிவித்த இந்தோனேசியாவின் நடவடிக்கையின் பின்னர் 2020 இல் அழிக்கப்படும் காடுகளின் பரப்பளவு நான்கு அடுத்தடுத்த வருடங்களில் குறைந்திருப்பது கவனிக்கப்பட்டது.
எனவே சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் இந்தோனேசியா தனது பாமாயில் தயாரிப்பை அதிகரிக்காமல் முன்னிருந்த அளவிலேயே வைத்திருக்கும்படி கோரிக் கோஷமெழுப்புகிறார்கள். இந்தோனேசியாவின் கரியமிலவாயு வெளியேற்றல் அளவு அதிகரிக்காமல் இருக்க, அதே சமயம் பாமாயில் தயாரிப்பை அதிகரிக்காததால் இழக்கும் வருவாயை ஈடுசெய்ய 2019 முதல் நோர்வே இந்தோனேசியாவுக்கு 1 பில்லியன் டொலர்களை உதவி நிதியாகக் கொடுத்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்