“இந்தக் கிருமிக்குப் பயப்படாமல், அதனுடன் வாழப் பழகிக்கொள்வோம் என்பதே எங்கள் வழி- ” ஸ்கொட் மொரிஸன்
தினசரி சுமார் மூன்று பேர் கொவிட் 19 ஆல் இறக்கும் ஆஸ்ரேலியாவில் இவ்வாரத் தொடக்கத்தில் மொத்த இறப்பு 1,003 ஆகியிருப்பது அறிவிக்கப்பட்டது. தனது எல்லைகளைப் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு மூடி வைத்திருந்த ஆஸ்ரேலியா, உள்நாட்டின் மாநில எல்லைகளை அவ்வப்போது மூடிக் கொரோனாப் பரவல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.
சமீபத்தில் ஆஸ்ரேலியாவுக்குள் எப்படியோ நுழைந்துவிட்ட டெல்டா திரிபு கொவிட் 19 சமூகப்பரவலாக ஆகிவிட்டிருக்கிறது. மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் அதன் பரவலை அரசின், மாநிலங்களின் கட்டுப்பாடுகளை நிறுத்த முடியவில்லை. நாட்டின் பாதிப்பேர் வாழும் பகுதிகளை ஆஸ்ரேலியா பொதுமுடக்கத்துக்குள் வைத்திருக்கிறது. கொவிட் 19 பரவல் இல்லாத பகுதிகள் சில கூட முடக்கப்பட்டிருக்கின்றன. தினசரி 1,200 பேரிடையே பரவி வருகிறது அவ்வியாதி.
வளர்ந்த நாடுகளிடையே ஒப்பிட்டால் ஆஸ்ரேலியாவின் தடுப்பு மருந்துகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்கள் குறைவாகவே இருக்கிறது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33 விகிதமானவர்களே அதைப் பெற்றிருக்கிறார்கள்.
நாட்டின் 16 வயதுக்கு மேற்பட்டவர்கஈல் 70 % விகிதமானவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்ட பின்னரே சமுகத்தைத் திறந்துவிடலாம் என்பது ஆஸ்ரேலிய அரசின் திட்டம். அதையடுத்து அத்தொகை 80 % ஆன பின்னரே வெளிநாட்டவர்களுக்காக ஆஸ்ரேலியா திறக்கப்படும்.
நிலைமையை எதிர்கொள்ள “இந்தக் கிருமிக்குப் பயப்படாமல், அதனுடன் வாழப் பழகிக்கொள்வோம் என்பதே எங்கள் வழி”, என்று பிரதமர் ஸ்கொட் மொரிஸன் தனது மக்களுக்குக் கூறியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்