இரத்தவகை 0 ஐக் கொண்டவர்கள் கொரோனாத்தொற்றால் பாதிக்கப்படுவது குறைவு.

கடந்த வருடம் கொரோனாத் தொற்றுக்கள் பரவலாக ஆரம்பித்தபோது கவனிக்கப்பட்ட விடயங்களிலொன்று குறிப்பிட்ட இரத்தவகையுள்ளவர்கள் அவ்வியாதியால் அதிக பாதிப்படைவதும், வேறொரு இரத்தவகையைக் கொண்டவர்களை அவ்வியாதி மென்மையாகப் பாதிப்பதுமாகும். அவ்விடயம் பற்றிய அதிக ஆராய்ச்சிகள் அச்சமயத்தில் செய்யுமளவுக்கு விபரங்களில்லாததால் அவை கொரோனாக் கிருமிகளின் மூலமான  SARS-CoV கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து ஆராயப்பட்டவையாகும். கொவிட் 19 தொற்றுக்களும் அதே வகையிலேயே இயங்கியது ஆரம்பத்திலேயே கவனிக்கப்பட்டது. 

இப்போது ஒரு வருடத்துக்குப் பின்னர் உலகின் பல நாடுகளிலுமிருந்து வரும் அறிக்கைகள், விபரங்கள், கவனிப்புக்களை வைத்துப் பார்க்கும்போது அது உண்மையென்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அக்கிருமி ஏன் வெவ்வேறு இரத்தவகையுள்ளவர்களை வெவ்வேறு விதமாகத் தாக்குகிறது என்பதற்கான தெளிவான காரணங்களை அறிவதற்காக மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டுமென்கிறார்கள் மருத்துவ விற்பன்னர்கள்.

இரத்தவகை A வைக் கொண்டவர்கள் கொரோனாக்கிருமிகளால் தாக்கப்படும்போது அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். 0 இரத்தவகையுள்ளவர்கள் கொரோனாக்கிருமிகளால் பாதிக்கப்பட்டுக் கடும் சுகவீனமடைவது குறைவு என்கிறார்கள் மருத்துவ ஆராய்வாளர்கள். 

ஆனால், இதை வைத்துக்கொண்டு 0 இரத்தவகையைக் கொண்டவர்கள் எவ்வித கவனமுமின்றி இருக்கமுடியாது. ஏனெனில் அதைத் தவிர வயதானவர்கள், உடல்பருமன், புகைத்தல், சர்க்கரை வியாதி போன்றவைகளைக் கொண்டவர்களையும் கொரோனாக்கிருமிக் கடுமையாகப் பாதிக்கிறது. எனவே 0 இரத்தவகையைக் கொண்டவர்களும் தொற்றுகளைத் தவிர்க்கவேண்டியவைகளைக் கவனத்துடன் செய்யவேண்டுமென்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *