ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவித்திட்டத்திலிருந்து மிகப்பெரும் தொகையைப் பெறப்போகும் நாடு இத்தாலி.

கொரோனாத்தொற்றுக்களால் நாட்டில் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்கொண்டு மீண்டும் அவைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக 222 பில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை இத்தாலி முன்வைத்திருக்கிறது. அத்தொகையில் 192 பில்லியன் எவ்ரோக்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவிப் பெட்டகத்திலிருந்து பெறுவதற்காக இத்தாலி ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர்லேயனுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒப்புதல் பெற்றிருக்கிறது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவிப் பெட்டகத்திலிருக்கும் மொத்தத் தொகை 750 பில்லியன் எவ்ரோக்களாகும். இத்தாலியின் பிரதமர் மாரியோ டிராகி ஒன்றியத் தலைவரிடமிருந்து பச்சை விளக்கைப் பெற்றிருந்தாலும் அத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அத்திட்டத்தை ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் ஏப்ரல் 30 ம் திகதி இத்தாலி சமர்ப்பிக்கும். 

ஒன்றியத்தின் உதவித்தொகையைப் பெறுவதற்கான முக்கிய கோரிக்கைகளிலொன்று அத்தொகையில் மூன்றிலொரு பகுதிக்கும் அதிகமானதை இயற்கையைப் பாதிக்காத தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்காகச் செலவழிக்கவேண்டும் என்பதாகும். நாட்டின் ரயில் தொடர்புகளை விஸ்தரிக்கவும், குப்பைகளை மீள எடுத்துப் பாவிக்கவும் வழிசெய்வதிலும் முதலீடு செய்யும் திட்டமிருக்கிறது. அத்துடன் சுமார் 50 பில்லியன் எவ்ரோக்கள் இத்தாலியின் தொலைத்தொடர்புகளை மேலும் டிஜிடல் அமைப்புக்குக் கொண்டுவருவதற்காகச் செலவிடப்படும். நாட்டில் 5G தொழில்நுட்பம் கட்டியெழுப்பப்படும். 

அதைத் தவிர இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி குறைந்த தெற்குப் பிராந்தியங்களையும் வடக்குக்கு இணையாக உயர்த்தும் திட்டங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கொரோனாக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட இளையவர்கள், பெண்களை மீண்டும் சுபீட்சமான நிலைக்கு உயர்த்தும் திட்டங்களையும் இத்தாலி முன்வைக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *