மூடப்பட்டிருந்த செப்டெம்பர் 11, 2001 தாக்குதல்கள் பற்றிய விசாரணை விபரங்கள் பகிரங்கங்கப்படுத்தப்படும் – ஜோ பைடன்
தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக ஜோ பைடன் இதுவரை “இரகசியமானவை” என்று பாதுகாக்கப்பட்டுவரும் செப்டெம்பர் 11, 2001 தாக்குதல்கள் பற்றிய விசாரணை விபரங்களை வெளியிடப்போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதங்களுக்குள் அவை வெளியாகும் என்று குறிப்பிடப்படுகிறது.
செப்டெம்பர் 11, 2001 தாக்குதல்களில் இறந்தவர்களின் உறவினர் நீண்டகாலமாகவே அமெரிக்க தேசியப் பொலீசாரின் அந்த விசாரணை விபரங்களை வெளியிடுமாரு கோரி வந்திருக்கிறார்கள். அரசியல் ரீதியாக வேறு நாடுகள் பற்றிய விபரங்கள் இருப்பதால் வெளியுறவுத் தொடர்புகளுக்கான சகஜநிலை காரணமாக அவைகளை வெளியிடவில்லை என்று குறிப்பிடப்பட்டு வந்தது.
சவூதி அரேபிய அரசகுடும்பத்தினருக்கும் அந்தத் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அவ்விசாரணைகளின் மூலம் அதன் விபரங்கள் வெளியாகி அமெரிக்காவுக்கும் – சவூதி அரேபியாவுக்கும் இடையே பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கவே அவை மறைக்கப்பட்டு வருவதாகவும் பலர் சந்தேகப்படுகிறார்கள்.
வரவிருக்கும் செப்டெம்பர் 11 தாக்குதலின் 20 வருட ஞாபகதினத்தை ஒட்டிய விபரங்களைப் பற்றிப் பேசும்போது, தான் நாட்டின் நீதியமைச்சரிடம் அந்த அறிக்கைகளை ஆராய்ந்து பகிரங்கமாக வெளிப்படுத்தத் தயாராகும்படி கேட்டுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்