லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி முஹம்மர் கடாபியின் மகன் சாடி சிறையிலிருந்து விடுதலை.
முஹம்மர் கடாபியின் மூன்றாவது மகனான சாடி கடாபி கால்பந்து விளையாட்டு வீரராகும். கடாபியைத் தலைமையிலிருந்து வீழ்த்துவதற்கான மக்கள் போராட்டம் ஆரம்பித்தபோது நாட்டின் பிரத்தியேக பாதுகாப்புப் படையின் தலைமை சாடியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2011 இல் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியில் பங்குபற்றியவர்களைத் தாக்கியது, பஷீர் அல்-ரயானி என்ற கால்பந்தாட்டப் பயிற்சியாளரைக் கொன்றது ஆகிய குற்றங்களுக்காகச் சிறைக்கனுப்பப்பட்டார்.
கடாபி ஆட்சி வீழ்ச்சியடையச் சில நாட்களுக்கு முன்னர் நாட்டைவிட்டுத் தப்பியோடி நைகர் நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்தார் சாடி. அங்கிருந்து மீண்டும் விசாரணைக்காக லிபியாவுக்கு நைகர் அவரை அனுப்பியது. 2014 முதல் சிறையில் இருந்து வந்தார் சாடி கடாபி. 2018 இல் அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கெல்லாம் அவர் குற்றவாளியில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
முஹம்மர் கடாபியின் வீழ்ச்சியின் பின்னர் அரசியல் கொந்தளிப்பும், போரும் லிபியாவில் ஏற்பட்டது. ரஷ்யா உட்பட்ட மேற்கு நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துருக்கி ஆகியவை லிபியாவின் அரசியலுக்குள் நுழைந்து தத்தம் ஆதரவாளர்களுக்குப் பல வழிகளிலும் உதவி வந்தன. பல வருடங்களாக நீடித்த போர் சமீபத்தில் ஓரளவு குறைந்திருக்கிறது.
வெவ்வேறு லிபிய அரசியல் புள்ளிகளுக்கிடையே நடந்த பேரம் பேசலின் பின்னர் சாடி கடாபி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். வெளியே வந்த உடனேயே அவர் துருக்கிக்கு விமானமேறியதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்