நைஜீரியாவின் தீவிரவாத இயக்கமான பொக்கோ ஹறாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் விலகினார்கள்.
நைஜீரியாவில் சகஜமானதாகிவிட்ட பிள்ளைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு வந்த பொக்கோ ஹறாம் என்ற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கத்திலிருந்து சுமார் 6,000 பேர் விலகி அரச அதிகாரிகளிடம் சரணடைந்திருப்பதாக நைஜீரிய அரசு தெரிவிக்கிறது. கிராமங்களைத் தாக்கிக் குரூரமான கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புக்களில் ஈடுபட்டு வந்த அந்த இயக்கத்தினர் அதிலிருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறுவது அரசின் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றியென்று நைஜீரியா குறிப்பிடுகிறது.
கடந்த 12 வருடங்களாக நைஜீரியாவில் கொடுமைகள் செய்துவந்த பொக்கோ ஹறாம் இயக்கத்தினரால் கொல்லப்பட்டவர்கள் 40,000 க்கும் அதிகமாகும். அவர்களுடைய மிலேச்சத்தனத் தாக்குதல்களால் கிராமங்கள் பல எரிக்கப்பட்டு அங்கிருந்து புலம்பெயர்ந்தவர்கள் பல மில்லியன் பேராகும்.
சில மாதங்களின் முன்பு பொக்கோ ஹறாம் இயக்கத்தின் தலைவன் அபூபக்கர் ஷெக்காவு அவர்களின் இயக்கத்தையொத்த இன்னொரு தீவிரவாத இயக்கத்தால் துரத்தப்பட்டு வெடித்து இறந்தான். அதன் பின்னர் அக்குழுவினருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகளே பலர் அதிலிருந்து வெளியேறிவரக் காரணமென்று நைஜிரிய இராணுவம் குறிப்பிடுகிறது.
அரச அதிகாரிகளிடம் தம்மைக் கையளித்துக் கொள்பவர்களில் பலர் கொடுமையான குற்றவாளிகளாக இருப்பினும் கூட அவர்களுக்கான மறுவாழ்வுக்கு உதவுவது அவசியம் என்கிறார் போர்னோ மாநிலத்தின் ஆளுனர்.
பொக்கோ ஹறாம் முழுவதுமாக அற்றுப்போகும் நிலைமை மகிழ்ச்சியானதாக இருப்பினும் மேலும் பலர் அதேபோன்ற தீவிரவாதக் குழுக்களில் சேர்ந்துகொள்கிறார்களென்றும் தெரியவருகிறது. அவர்களில் முக்கியமானவர்கள் மத்திய கிழக்கில் இஸ்லாமியக் காலிபாத்துக்குப் போராடும் இயக்கத்தினரின் ஆபிரிக்கக் கிளையினராகும். அக்குழுவினருடனான மோதலிலேயே அபூபக்கர் ஷெக்காவு இறந்தான்.
நைஜீரிய இராணுவம் பொக்கோ ஹறாம் அமைப்பை நீண்ட காலமாகக் கடுமையான முறைகளிலேயே எதிர்கொண்டு வந்தது. ஆனாலும், அவர்களால் வெற்றிபெற இயலவில்லை. இப்போது புதியதாகப் பலம் பெற்றுவரும் இஸ்லாமியக் காலிபாத்தின் மேற்கு ஆபிரிக்க இயக்கத்தினர் [Islamic State West Africa Province] நைஜீரியாவுக்குப் புதிய தலைவலியாக முளைத்திருக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமன்றி வெவ்வேறு சிறு ஆயுதக் குழுக்களும் நைஜீரியாவில் குழந்தைகளைக் கடத்திப் பணம் பறிப்பதில் ஈடுபட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்