நைஜீரியாவின் தேவாலயமொன்றைத் தாக்கி 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள்.

நைஜீரியாவில் அடுத்தடுத்து நடந்துவரும் பல கொடூரத் தாக்குதல்களில் ஒன்றாக ஞாயிறன்று தேவாலயமொன்றில் 50 க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டார்கள். அந்தத் தாக்குதல்களை யார் நடத்தியது என்று தெரியாவிட்டாலும் நாடெங்கும் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பில்லாத நிலைமையை இந்தத் தாக்குதலின் காட்சிகள் உலகுக்குப் பளிச்சென்று காட்டின.

தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட மனிதர்கள் இரத்தச் சகதிக்குள் சிதறிப்போய்க் கிடக்கும் காட்சிகளைச் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்ட படங்கள் காட்டி எல்லோரையும் அதிரவைத்தன. ஊவோ என்ற நகரிலிருக்கும் தேவாலயத்துக்குள் ஈருளிகளில் ஆயுதபாணிகளாக வந்த ஒரு கூட்டத்தினரே சரமாரியாகச் சுட்டுத் தள்ளினார்கள். ஞாயிறு சேவைக்கு வந்திருந்த மக்களிடையே அவர்களை கைக்குண்டுகளையும் வீசினார்கள். தேவாலயத்துக்குள்ளிருந்து மேற்றிராணியார் ஒருவரைக் கடத்த வந்த அந்தக் கும்பலை மக்கள் எதிர்த்து நிற்கவே அவர்களை மிருகத்தனமாக அக்கூட்டம் கொன்று குவித்ததாக உள்ளூர்ச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்த சில வருடங்களாகவே நைஜீரியாவின் ஒரு பக்கத்தில் பாடசாலைகளில் குழந்தைகளைக் கடத்தி ஒரு சாரார் பணயமாகப் பணம் கேட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கத்தில் பொக்கோ ஹராம், அல் கைதா, ஐ.எஸ் ஆகிய இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வெறியாட்டம் நடந்து வருகிறது. இத்தாக்குதல் நடந்த ஓண்டோ என்ற மாநிலம் இதுவரை அப்படியான இரத்தக்களரிகளைக் காணாமலிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவின் தலைநகரான அபூயாவில் இஸ்லாத்துக்கு எதிராகப் பேசியதாக ஒரு இமாமால் சுட்டிக் காட்டப்பட்ட ஒருவரை மக்கள் கூட்டம் அடித்துக் கொன்றது. மே மாதத்தில் ஒரு கிறீஸ்தவ மாணவி சமூகவலைத்தளத்தில் இறைதூதர் முஹம்மதுவைக் கேலி செய்ததாகப் பொதுமக்களால் கொல்லப்பட்டிருக்கிறாள். இதே போன்று நாடெங்கும் வெவ்வேறு காரணங்களால் பதட்ட நிலைமகள் ஏற்பட்டுச் சட்டம் ஒழுங்குகளை எவரும் மதிக்காத நிலைமை உண்டாகியிருக்கிறது.

அடுத்த வருட ஆரம்பத்தில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. பதவியிலிருக்கும் ஜனாதிபதி முஹம்மது புஹாரி போட்டியிடமாட்டார். சட்டம் ஒழுங்கு, மத வேறுபாடுகளிலான சர்ச்சைகள் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *