எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனையை மீறி சிறீலங்கா பாராளுமன்றம் நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது.

வெவ்வேறு காரணங்களால் சிறீலங்காவில் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் அவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக நாட்டில் அவசரகால நிலையை ஆகஸ்ட் 30 ம் திகதி ஜனாதிபதி பிரகடனம் செய்தார். உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டு நேரத்தைப் பயன்படுத்தி எவரும் அவைகளைப் பதுக்காமலிருக்க, தேவையான சட்டங்களைப் பயன்படுத்தவே அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் திட்டத்தை நாட்டின் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

உணவுப் பொருட்கள் பலவற்றுக்காக இறக்குமதியையே நம்பியிருக்கும் சிறீலங்காவின் பணமதிப்புச் சமீப மாதங்களில் வீழ்ச்சியடைந்து வந்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் உணவுப் பொருட்கள் ஏற்றம், கொரோனாக் கட்டுப்பாட்டு பொதுமுடக்கங்களின் பக்கவிளைவுகள், கடல்போக்குவரத்தில் உண்டாகியிருக்கும் தேக்கம் ஆகியவற்றைத் தவிர அரசின் வெளிநாட்டுக்க் கடன் சுமையாலும் இறக்குமதிப் பொருட்களுக்கான விலை அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

சர்க்கரை, பால்மா, சமையலுக்கான எரிவாயு ஆகியவைகளின் விலை அதிகரித்திருப்பதுடன் அவைகளுக்கு நாடெங்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலையேற்றத்துக்கும், தட்டுப்பாட்டுக்கும் காரணம் வியாபாரிகள் மேலும் அதிக விலையில் விற்பதற்காக தம்மிடமிருக்கும் பண்டங்களைப் பதுக்கிவைத்திருப்பதே என்று சாடுகிறார் ஜனாதிபதி கோத்தாபயா.

பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் சந்தேகத்துக்குரியவர்களை ஆணைப்பத்திரமின்றி உடனடியாகக் கைதுசெய்யவும், அவர்களுடைய வளாகங்களில் தேடுதல் நடத்தவும், தேவையானால் சொத்துக்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகுக்கும். அதிகாரிகள் அவசியமான சமயத்தில் தேவையான சட்டங்களை அமுல்படுத்தலாம். அப்படியான உத்தரவிடும் அதிகாரிகளை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது.  

அவசரகாலச் சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவரக் காரணம் அரசு தமக்கு எதிரானவர்களை ஒடுக்கவும், மிரட்டவும் உதவும், அதிகாரிகளுக்கு எல்லையில்லாத அதிகாரத்தைக் கொடுத்துத் தவறுகள் ஏற்பட வழிசெய்யும் என்று எதிர்க்கட்சியினர் எதிர்த்து விமர்சித்து வருகிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *